Published : 08 Apr 2022 05:46 AM
Last Updated : 08 Apr 2022 05:46 AM
புதுடெல்லி: மீட்பு பணியில் ஈடுபட, நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அடிப்படை பயிற்சிகளை அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கான திறன் மேம்பாடு குறித்த 2 நாள், வருடாந்திர மாநாட்டை புதுடெல்லியில், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பேரிடர் காலங்களில் விடப்படும் எச்சரிக்கைகள் நாட்டின் தொலைதூர பகுதிகள் மற்றும் அங்குள்ள தேசிய மாணவர் படை (என்சிசி), ஊர்காவல் படையினர், பெண்கள் குழுவினருக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை மீட்பு பணியில் ஈடுபடும் அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
அவசர காலங்களில் மீட்பு பணியில் ஈடுபட மக்களுக்கு தேசிய பேரிடர் குழுவினர் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான், மீட்பு படை சம்பவ இடத்துக்கு வரும் வரை, பயிற்சி பெற்ற நபர்களால், இடைவெளி இல்லாமல் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு பல ‘ஆப்’களை நாம் உருவாக்கியுள்ளோம். ஆனால், எச்சரிக்கைகள் தொலைதூர பகுதிகளுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் திடமான வழிமுறையை நாம் உருவாக்க வேண்டும். மீட்பு பணிகளை மேற்கொள்ள என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், சுய உதவிக் குழு பெண்கள் ஆகியோரையும் ஈடுபடுத்த வேண்டும்.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பயிற்சி அளிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் பல குழுவினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், பேரிடர் சமயத்தில், நம்மால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது. சரியான திட்டமிடல் காரணமாக பேரிடர் காலங்களில் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT