Published : 07 Apr 2022 06:10 AM
Last Updated : 07 Apr 2022 06:10 AM

உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயிலில் தாக்குதல் - மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு சதி?

லக்னோ: கோரக்பூர் கோயில் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியுடன் தொடர்புடைய பலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது கூட்டாளிகள் சிலரை தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயில் உள்ளது. கடந்த 3-ம் தேதி மாலை, இக்கோயிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர் ஒருவரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கினார். இதில் போலீஸ் காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

பிறகு பொதுமக்கள் தலை யிட்டதில் போலீஸார் அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். அவரது பையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் விமான டிக்கெட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவரது பெயர் அகமது முர்தாஸா அப்பாஸி (30) எனவும் 2015-ம் ஆண்டு மும்பை ஐஐடியில் படிப்பு முடித்தவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவருக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

அப்பாஸியின் ஆதார் முகவரி அடிப்படையில் நவி மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு உ.பி. போலீஸாரும் மத்திய உளவுப் பிரிவினரும் கடந்த திங்கட்கிழமை தகவல் சேகரிக்கச் சென்றனர். ஆனால் அந்தக் குடியிருப்பு 2013-ம் ஆண்டிலேயே விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மறுநாள் நவி மும்பையில் அப்பாஸியின் தந்தையால் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு கடந்த சில நாட்களில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தனர்.

இந்நிலையில் அப்பாஸியின் 4 வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலுக்கான சதி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் உ.பி.யின் தியோபந்த் நகரை சேர்ந்த இருவர் உட்பட பலரை போலீஸார் நேற்று பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கூட்டாளிகள் சிலரை தேடி வருகின்றனர்.அப்பாஸியை போலீஸார் வரும் 11-ம் தேதி வரை தங்கள் காவலில் எடுத்துள்ளனர். விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x