காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்: கூடுதல் படைகளை அனுப்பியது மத்திய அரசு

காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்: கூடுதல் படைகளை அனுப்பியது மத்திய அரசு
Updated on
2 min read

காஷ்மீரில் தொடர்ந்து பற்றம் நீடிப்பதால் மத்திய அரசு கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிப்படைந்துள்ளது.

குப்வாரா மாவட்டம் ஹந்த்வாராவில் பள்ளி மாணவியை ராணுவ வீரர் ஒருவர் மானபங்கப்படுத்தியதாக பரவிய தகவலால் கடந்த செவ்வாய்கிழமை முதல் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி இளம் கிரிக்கெட் வீரர், ஒரு பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து குப்வாராவின் நாத்நுசா என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வன்முறையாளர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆரிப் ஹூஸேன் தர் (18) என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதனால் மீண்டும் பதட்டம் உருவானதை அடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இணையதளம் மற்றும் மொபைல் சேவைகளும் முடக்கப்பட்டன.

வன்முறை சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உள்பட 60 பேர் காயமடைந்துள்ளனர். பாராமுல்லா உள்பட மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரின் பிற பகுதிகளிலும் வன்முறை பரவி வருவதால் 4-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவைகளும் முடக்கப்பட்டன.

பிரிவினைவாத அமைப்புகளும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கந்தர்பால் பகுதியில் மீண்டும் புதிதாக மோதல் சம்பவங்கள் வெடித்தன. இதையடுத்து வன்முறை பரவுவதை தடுக்கவும், பதற்றத்தை தணிக்கவும் கூடுதல் துணை ராணுவப் படை வீரர்கள் 3,600 பேரை காஷ்மீருக்கு மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது. அத்துடன் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுமி, தந்தையை கைது செய்தது ஏன்? - போலீஸுக்கு கோர்ட் கேள்வி

சிறுமி, தந்தை மற்றும் உறவினர் ஒருவரை காவல்துறை கைது செய்ததையடுத்து சிறுமியின் தாயார் தஜா பேகம், சனிக்கிழமையன்று கோர்ட்டை அணுகினார். போலீஸ் இந்தக் கைது நடவடிக்கையை தடுப்புக் காவல் நடவடிக்கை என்று வர்ணித்திருந்த்து.

இந்நிலையில் நீதிபதி முசாபர் ஹுசைன் அத்தார் தலைமை அமர்வுக்கு சிறுமியின் தாயார் தஜா பேகம் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிறுமியை உடனே ஆஜர் படுத்த உத்தரவிட்டதோடு, இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹந்த்வாராவில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவியை ராணுவ விரிஅர் ஒருவர் மானபங்கப்படுத்தியதாக தகவல் பரவ காஷ்மீரில் கடந்த செவ்வாய் முதல் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன.

இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கு பதற்றம் நீடிக்கிறது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in