Published : 06 Apr 2022 12:27 PM
Last Updated : 06 Apr 2022 12:27 PM

'நாம் தேசபக்தியோடு இருக்கிறோம்; சில கட்சிகளுக்கு குடும்ப பக்தி மட்டும்தான் இருக்கிறது' - பாஜகவின் 42-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: 'நாம் தேசபக்தியோடு இருக்கிறோம்; சில கட்சிகளுக்கு குடும்பபக்தி மட்டும்தான் இருக்கிறது' என்று பாஜகவின் 42-வது நிறுவன தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பாஜகவின் 42வது நிறுவன நாளான இன்று (ஏப்ரல் 6) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி, "பாஜக தேசபக்தியோடு அர்ப்பணிப்புடன் இயங்குகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப பக்தி மட்டும் தான் தெரியும்.

இன்று இந்த உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இரண்டு பெரும் ஜாம்பாவன்களுக்கு இடையேயான பிரச்சினையில் (ரஷ்யா, அமெரிக்கா) நாம் யாருக்கும் அஞ்சாமல், எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் இருக்கிறோம். இந்திய அரசாங்கம் தேச நலனை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து செயல்படுகிறது.

உலகமே நெருக்கடியான சூழலை சந்திக்கும் இவ்வேளையிலும் இந்தியா 80 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களைத் தருகிறது. ஏழைகள் இரவில் பட்டினியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக இந்த அரசு ரூ.3.5 லட்சம் கோடி செலவு செய்கிறது.
இந்த ஆண்டு பாஜக நிறுவன நாள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்த ஆண்டு நாம் நாட்டின் 75வது சுதந்திர நாளை கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்ல நாம் 4 மாநிலங்களில் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளோம். மேலும், மாநிலங்களவையில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.

வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரி. குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் தரும் கட்சிகள் நாட்டின் இளைஞர்களை எப்போதுமே முன்னேறவிட்டதில்லை. இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகள் அவை. இன்று பாஜக தான் அந்தக் கட்சிகள் செய்யும் அநீதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக வேலை செய்வதே பாஜகவின் அடிப்படை மதிப்பீடுகள். அதனால் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கச் முதல் கொஹிமா வரையிலும் பாஜக ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலில் ஒவ்வொரு பாஜக உறுப்பினருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு தொண்டருமே, தேசத்தின் கனவுகளின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x