Published : 06 Apr 2022 06:26 AM
Last Updated : 06 Apr 2022 06:26 AM

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் - பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக நிறுவப்பட்ட தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாஜக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மக்கள் சேவையில் ஈடுபட பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி ஏப்ரல் 7-ம் தேதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் குறைந்த விலை மருந்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஏப்ரல் 8-ம் தேதி பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா வீடு கட்டும் திட்டம், ஏப்ரல் 9-ம் தேதி வீடுகளுக்கான குடிநீர் திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

ஏப்ரல் 11-ம் தேதி ஜோதிபா பூலேவின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். 12-ம் தேதி எம்.பி.க்கள் சுற்றுவட்டார பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியர் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வரும் 13-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு சென்று இலவச உணவு தானிய திட்டம் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை மக்களோடு இணைந்து கொண்டாட வேண்டும்.இதேபோல ஏப்ரல் 15-ம் தேதி பழங்குடியினர் தினத்தை கொண்டாட வேண்டும். அந்த சமுதாய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

ஏப்ரல் 16-ம் தேதி அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும், வரும் 17-ம் தேதி மத்திய அரசின்பொருளாதார திட்டங்கள் குறித்தும், வரும் 18-ம் தேதி விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் குறித்தும் வரும் 19-ம் தேதி அங்கன்வாடிகளுக்கு சென்று ஊட்டச் சத்து திட்டம் குறித்தும், வரும் 20-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர்களின் பெருமைகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜகநிறுவன தினத்தையொட்டி புதன்கிழமை காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்

இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x