

வங்கிகளை தனியார்மயமாக்கு வது, இந்தி மொழியைத் திணிப்பது, ரயில் கட்டண உயர்வு ஆகியவற் றுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாள்களாக டெல்லி யில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இவை தொடர்பாக பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.சுதாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க பி.ஜி.நாயக் கமிட்டி அளித்துள்ள பரிந்துரை களை நிராகரித்து பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவிலும் இதர மேற் கத்திய நாடுகளிலும் தனியார் வங்கிகள் திவாலாகி வரும் நிலை யில் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார் நிறுவனங் களுக்கு தாரை வார்ப்பது தற்கொலைக்கு சமமானது.
இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது, ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
இராக்கில் நடைபெறும் நிகழ்வு களுக்கு பின்னால் அமெரிக்காவின் சதி உள்ளது. இது பல நாடுகளின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஊறுவிளைவிக்கக் கூடும். அங்கு சிக்கியுள்ள இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள், செவிலியர்கள் உள்பட 20 ஆயிரம் பேரின் நிலைமை கவலை அளிக்கிறது. அவர்கள் நாடு திரும்புவதற்கு மோடி அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதாக சுதாகர் ரெட்டி தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் குறித்து 43 மாநில செய லாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆலோசனை நடத்தப்பட்டது.
காங்கிரஸிற்கு எதிரான வாக்கு களால் உருவான வெற்றிடம், பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு அடிகோலி விட்டது.
முதல்முறையாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆயிரக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் களம் இறங்கி மதவாத பிரச்சாரத்தை முன் வைத்தனர் என்று கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் பிரச்சார குறைபாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற் றுக்கு மாற்றாக உறுதியான அணியை இடதுசாரிகள் முன்னி றுத்த தவறியது மிகப்பெரிய தோல்விக்கு காரணம் எனவும் தெலங்கானாவில் மட்டும் காங்கிர ஸுடன் கூட்டணி அமைத்தது அரசியல் தவறு எனவும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.