

குழந்தைப் பராமரிப்பாளராக தனது தங்கையை மடியில் படுக்கவைத்தபடி, மணிப்பூர் பள்ளியில் பாடத்தை கவனித்துவரும் 10 வயது சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வறுமைச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் இடைநிற்றலை சந்திக்கும் பெண்பிள்ளைகள் ஏராளம். கடந்த இரண்டு வருடங்களில் கரோனா காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் மணிப்பூர் சிறுமி ஒருவர் தனது தங்கையை மடியில் அமரவைத்துவிட்டு பள்ளியில் பாடத்தை கவனிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்புகைப்படத்தில் இருப்பவர்,மணிப்பூரை சேர்ந்தவர் 10 வயதான மெய்னிங் சின்லியு பேமே என்ற சிறுமி. இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், சிறு குழந்தையான தனது தங்கையை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் தனது தங்கையையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், இவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து மணிப்பூர் விவசாயத் துறை அமைச்சர் பிஸ்வாஜித் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வியில் இந்தச் சிறுமியின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது..!” என்று பதிவிட்டுள்ளார்.
சிறுமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நெட்டிசன்களில் ஒரு பிரிவினர் சிறுமியின் கல்வி ஆர்வத்தை பாராட்ட, மற்றொரு பிரிவினர் வறுமையை புனிதப்படுத்தாதீர்கள், அந்தச் சிறுமி இடையூறு இல்லாமல் கல்வியைத் தொடர வேண்டிய உதவிகளை செய்வதே உகந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.