Last Updated : 21 Apr, 2016 03:53 PM

 

Published : 21 Apr 2016 03:53 PM
Last Updated : 21 Apr 2016 03:53 PM

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தும் ஏடிஎம் செக்யூரிட்டி

டெகரடூனின் அலகாபாத் வங்கியின் ஏடிஎம் அறையின் பாதுகாவலராக முன்னாள் ராணுவ வீரர் விஜயேந்தர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 வருடங்களாக தனது பணியுடன் சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராக இருப்பது டெகரடூன். இதன் ஐ.எஸ்.பி.டி பேருந்து நிலையம் அருகில் அலகாபாத்தின் வங்கி அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள வங்கியின் ஏடிஎம் இரவு நேரக் காவலராக விஜயேந்தர்(54) எனும் முன்னாள் ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் அக்கம் பக்கம் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தருகிறார். துவக்கப்பள்ளியின் பாடங்களை விஜயேந்தரிடம் படிக்கும் குழந்தைகளில் பலர் பள்ளிக்கு செல்லாதவர்கள். இவர்களில் சிலர், விஜயேந்தர் அளிக்கும் ஊக்கத்தினால் கவரப்பட்டு பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய விஜயேந்தர் கூறுகையில், ‘பாதுகாப்பு எனும் பெயரில் பலசமயம் வெறுமனே அமர்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. இத்துடன், குழந்தைகளுக்கு துவக்கக் கல்விப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. என்னிடம் படித்து பல குழந்தைகள் இன்று பல பிரபல கல்லூரிகளில் இணைந்து பயின்று வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதற்காக, குழந்தைகளிடம் எந்தவிதக் கட்டணமும் பெறாமல் இலவசமாகவே சொல்லித் தருகிறார் விஜயேந்தர். மாலைவேளைகளில் அப்பகுதியில் மூடப்பட்டு விடும் கடைகளின் வாசலில் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர். இதற்கு உதவியாக அந்த வங்கிப் பலகையின் விளக்குகள் உள்ளன. நாட்டில் பலரும் செய்து வரும் பல்வேறு வகையான சமூகத் தொண்டுகளில் விஜயேந்தரின் பணி தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x