Last Updated : 21 Apr, 2016 05:18 PM

 

Published : 21 Apr 2016 05:18 PM
Last Updated : 21 Apr 2016 05:18 PM

வாகனக் கட்டுப்பாடு எதிரொலி: டெல்லியில் பழைய சிஎன்ஜி கார்களுக்கு அமோக வரவேற்பு

கடந்த ஏப்ரல் 15 முதல் டெல்லியின் சாலைகளில் வாகனக்கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பழைய சிஎன்ஜி கார்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இரண்டாவது சோதனை முறையில் 15 நாட்களுக்காக வாகனக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒற்றைப்படையில் முடியும் எண்களை கொண்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதே எண்ணுள்ள தேதிகளில் மட்டும் தான் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள், இரட்டைப்படைகளில் முடியும் தேதிகளில் செல்ல முடியாது.

இதை சமாளிக்க பெரும்பாலானவர்கள் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், இருசக்கர வாகனக்கள் மற்றும் அக்கம் பக்கம் வசிப்பவர்களின் வாகனங்களில் செல்வது போன்றவற்றை நாடுகின்றனர். இன்னும் சிலர் பெட்ரோலில் ஓடும் தம் வாகனங்களுடன் சேர்த்து, சி.என்.ஜியால் ஓடும் கார்களை வாங்க முற்பட்டுள்ளனர். இந்த வகை வாகனங்களுக்கு வாகனக்கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெல்லியின் மாசுக்கட்டுப்பாட்டிற்கு பாதகம் இல்லை என்பது அதன் காரணம் ஆகும். எனவே, டெல்லியில் சி.என்.ஜி வாகனங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து கரோல் பாக் பகுதியில் உள்ள பழைய கார்கள் விற்பனையாளரான ராஜேஷ் சர்மா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘பெட்ரோலில் ஓடுபவை போல் சி.என்.ஜி கார்களில் அதிக வேகம் செல்ல முடியாது. இதனால், பழைய சி.என்.ஜி கார்களுக்கு அதிக வரவேற்பு கிடையாது. தற்போது வாகனக்கட்டுப்பாடு அமலில் உள்ளதால் இந்தவகையை கேட்போர் அதிகமாகி விட்டனர். இதன் காரணமாக எங்களுக்கு மார்க்கெட்டில் சி.என்.ஜி கார்கள் வரும் முன்பே விற்பனையாகி விடுகிறது.’ என தெரிவித்தார்.

இரண்டாவது சோதனைக்குப் பின் டெல்லியில் வாகனக்கட்டுப்பாடு ஒவ்வொரு மாதமும் 15 தினங்களுக்கு என நிரந்தரமாக அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளிப்படுத்தி இருந்தார். இதனால், டெல்லிவாசிகள் தம் பெட்ரோல் கார்களை விற்றும் அல்லது கூடுதலாகவும் பயன்படுத்தப்பட்ட பழைய சி.என்.ஜி கார்களை விலைக்கு வாங்கு முற்பட்டுள்ளனர்.

ஞாயிறு தவிர மற்ற வார நாட்களில் காலை 8.00 முதல் மாலை 8.00 மணி வரை வாகனக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதை மீறுவோருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் இந்த சட்டத்தில் பெண்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்வன உட்பட 30 வகையினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x