Published : 03 Apr 2022 08:39 PM
Last Updated : 03 Apr 2022 08:39 PM

பொருளாதார, வர்த்தகம் தொடர்பாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து: 96% இந்திய பொருளுக்கு சுங்க வரி ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார, வர்த்தகஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி, தோல், நகை உள்ளிட்ட 96% இந்திய பொருட்களுக்கு சுங்க வரி ரத்தாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்வர்த்தக ஒப்பந்தம் கையெழுத் தானது. இதில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலாத் துறைஅமைச்சர் தன் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்திய-ஆஸ்திரேலிய உறவில்இது மிகவும் முக்கியமான தருணம்என பிரதமர் மோடி தெரிவித்தார். இதுபோல, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “இப்போது ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 4 முதல்5% சுங்க வரி விதிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல், நகை உள்ளிட்ட 96.4 சதவீத பொருட்களுக்கு இனி ஆஸ்திரேலியா சுங்க வரி விதிக்காது. இதன்மூலம் இப்போது ரூ.2.05 லட்சம் கோடியாக உள்ள இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், அடுத்த 5 ஆண்டில் ரூ.3.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்றார்.

ஜவுளி, ஆயத்த ஆடை, வேளாண் மற்றும் மீன் உணவு வகைகள், தோல், காலணிகள், பர்னிச்சர், விளையாட்டு பொருட்கள், நகை, இயந்திரம், மின்சாதனங்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு சுங்க வரி ரத்தாகும்.

இந்தியாவின் 17-வது வர்த்தக பங்குதாரராக ஆஸ்திரேலியா உள்ளது. இதுபோல அந்த நாட்டின் 9-வது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா உள்ளது. 2021-ல் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.52 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதுபோல ரூ.1.14 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x