Published : 03 Apr 2022 05:29 AM
Last Updated : 03 Apr 2022 05:29 AM

ரூபே சேவை உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள்: இந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து - பிரதமர் மோடி, பிரதமர் தேவ்பா தொடங்கி வைப்பு

இந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவும் தொடங்கி வைத்தனர். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறுஒப்பந்தங்களில் கையெழுத் திட்டனர்.

இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தேவ்பா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் உயர் மட்ட அளவில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது ரயில்வே, எரிசக்தி உட்பட 4 முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் பிரதமர் மோடியும் பிரதமர் தேவ் பாவும் கையெழுத்திட்டனர்.

நேபாளத்தில் இந்தியா கட்டமைத்துள்ள ‘சோலு காரிடார’ 132 கிலோவாட் மின் பகிர்மான திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச மின்சக்தி கூட்டமைப்பிலும் நேபாளம் இணைந்து கொண்டது. பிஹார் மாநிலம் ஜெய்நகரில் இருந்து நேபாளத்தின் குர்தா பகுதி வரையிலான ரயில் போக்குவரத்தை இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொடங்கி வைத்தனர். அத்துடன் நேபாளத்தில் ரூபே பணப் பரிமாற்ற சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியாவின் நிதி தொடர்பு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருநாட்டு பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இதுகுறித்து பிரதமர் தேவ்பா கூறும்போது, ‘‘இந்தியாவுடனான நேபாளத்தின் நட்புறவு மிகமிக முக்கியமானது. நேபாளம் மற்றும் நேபாள மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்திய பயணம் அந்த நட்புறவை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.

பிரதமர் மோடி கூறியுள்ள தாவது: இந்தியா - நேபாளம் இடையே உள்ள உறவு தனித்துவமானது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற நட்புறவை பார்க்க முடியாது. இந்தியா - நேபாளம் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும், தொடர்புகளை அதிகரிக்கவும் பிரதமர் தேவ்பாவும் நானும் ஒப்புக் கொண்டுள்ளோம். நேபாளத்தில் இந்திய நிறுவனங்கள் நீர்மின் நிலையங்கள் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. நேபாளத் தின் அமைதி, செழிப்பு, வளர்ச்சியில் இந்தியா உறுதியான நண்பனாக உள்ளது. இந்திய - நேபாள நட் புறவை மேம்படுத்துவதில் பிரதமர் தேவ்பாவின் பங்கு மிகப் பெரியது.

சர்வதேச மின்சக்தி கூட்டமைப் பில் நேபாளம் உறுப்பினரானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் நமது பிராந்தியத்தில் நீடித்த, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத எரிசக்தி வளர்ச்சி அடையும். நேபாளத்தில் இந்திய நிறுவனங்கள் நீர்மின் நிலையங்கள் துறையில் அதிகமாக ஈடுபட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், உபரியாக உள்ள மின்சாரத்தை இந்தியாவுக்கு நேபாளம் வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முன்னதாக ஹைதராபாத் இல்லம் செல்லும் முன்பு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டுக்கு பிரதமர் தேவ்பா சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x