Published : 02 Apr 2022 10:05 PM
Last Updated : 02 Apr 2022 10:05 PM

'திமிர்பிடித்த பாஜக வேண்டாம்... ஆம் ஆத்மிக்கு வாய்ப்புத் தாருங்கள்...' - குஜராத்தில் கெஜ்ரிவால் முழக்கம்

அகமதாபாத்: டெல்லி மக்கள் செய்தது போல, பஞ்சாப் மக்கள் செய்தது போல, ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று குஜராத் மக்களிடம் முறையிட்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

பஞ்சாப் தேர்தலில் இந்தியாவின் இருபெரும் கட்சிகளை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி வெற்று பெற்று ஆட்சியை பிடித்த பின்னர், அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்களின் மீதும் தனது கவனத்தை திருப்பி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைதச்சர் அமித் ஷாவின் மாநிலமான குஜராத் மீது தன் பார்வையை பதித்துள்ளார் அரவிந்த கெஜ்ரிவால். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சனிக்கிழமை (ஏப்.2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் அரவிந்த கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "குஜராத்தில் 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு (பாஜக) இப்போது திமிர்பிடித்துள்ளது. இனி அவர்கள் மக்கள் சொல்வதை கேட்கப் போவதில்லை. பஞ்சாப் மக்கள் செய்ததைப் போல, டெல்லி மக்கள் செய்ததைப் போல நீங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். எங்கள் கட்சியைப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை மாற்றி விடுங்கள். மற்ற கட்சிகளை மறந்து விடுங்கள். ஆம் ஆத்மிக்கு வாய்ப்புத் தாருங்கள்.

நான் எந்தக்கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. பாஜகவை காங்கிரசை தோற்கடிக்க வரவில்லை. குஜாராத்தை வெற்றியடைய வைக்க வந்துள்ளேன். குஜராத்தையும் குஜராத்திகளையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஊழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்று தெரிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் பேசும் போது, "பஞ்சாப் மற்றும் டெல்லி முறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து குஜராத்தின் மீது கவனம் செலுத்த உள்ளோம்" என்றார்.

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இருவரும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபா காந்தி தங்கி இருந்த ஹிரிதாய் குஞ்ச்-யையும், ஆசிரமத்தில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

ஆசிரமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "காந்திஜி பிறந்த அதே நாட்டில் பிறந்ததற்காக பெருமைப் படுகிறேன். நான் டெல்லி முதல்வராக பதவியேற்ற பிறகு இங்கு வருவது இதுவே முதல் முறை. ஆனால் நான் ஓர் ஆர்வலராக இங்கு வந்துள்ளேன்" என்றார்.

பகவந்த் மான் கூறும்போது, "நான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தேசமான பஞ்சாப்பில் இருந்து வருகிறேன். நான் இங்கு காந்திஜியின் கடிதங்கள் மற்றும் அவர் முன்னெடுத்த பல்வேறு இயக்கங்கள் என நிறையப் பார்க்கிறேன். பஞ்சாபில் உள்ள எல்லா வீடுகளிலும் சர்க்கா உள்ளது. என் அம்மாவும் பாட்டியும் பயன்படுத்துகிறார்கள். என் குழந்தை பருவத்திலிருந்தே சர்க்கா பயன்படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் தேசியவாதிகள், நாங்கள் தேசத்தை நேசிக்கிறோம். நான் பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு குஜராத்துக்கு முதல் முறையாக வருகிறேன்" என்றார்.

செய்தியாளர்களின் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த கெஜ்ரிவால், "யே பவித்ரா ஸ்தான் ஹை. ராஜ்நீதி கி பாடின் பஹார்" (இது ஒரு தூய்மையான இடம். அரசியல் பேச்சுகள் வெளியில் நடைபெறும்) என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x