Published : 27 Apr 2016 06:36 PM
Last Updated : 27 Apr 2016 06:36 PM

விவிஐபி ஹெலிகாப்டர் பேர விவகாரம்: அரசியல் சதியில் பலிகடா ஆனதாக இடைத்தரகர் பேட்டி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல், தான் அரசியல் சதியின் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் இடைத்தரகர் மைக்கேலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்நிறுவன முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பானோவுக்கும், கியூசெப்பி ஓர்ஸிக்கும் அண்மையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: இத்தாலி நீதிமன்ற தீர்ப்பில் ரூ.250 கோடிக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தைப் பெற காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரிடம் பேரம் நடத்தப்பட்டதும் தெளிவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 193, 204-ல் சோனியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் துபாயிலிருந்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இடைத்தரகர் ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல் அளித்த பேட்டி வருமாறு:

உங்கள் பெயரில் இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் உள்ளது. இத்தாலி, இந்தியாவில் உங்கள் பெயரில் கைது வாரண்ட்கள் உள்ளன. நீங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட ஆவணங்களின்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். எதற்காக பிரதமர் மோடிக்கு நேரடியாக நீங்கள் கடிதம் எழுதினீர்கள்?

ஆம். நான் கடிதம் எழுதியது உண்மைதான். பிரதமருக்கு முழு விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டின் பிரதமரான அவருக்கு ஒவ்வொரு விவகாரத்தின் முழு விவரத்தையும் அலசி ஆராய நேரமிருக்காது. அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று நான் உணர்ந்ததால் அவருக்கு நேரடியாகக் கடிதம் எழுதினேன்.

இந்திய அதிகாரிகள் உங்களை விசாரிக்கவும் நீங்கள் ஒப்புக்கொண்டுள்ளீர்கள்...

ஆம், நேரடியாக இதனை விளக்க அதுவே ஒரு வாய்ப்பு. ஆனால் இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் நான் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து அஞ்சினேன். அது என்னால் முடியாது. என்னுடைய செலவுகளை எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளவும் யாரும் இல்லை. இதுதான் என் பிரச்சினை. இத்தாலியிலும் இதே பிரச்சினைதான். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஆனால் என்னை கைது செய்ய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லாமல் நான் எங்கும் வரப் போவதில்லை.

எனவே கைது இல்லை என்ற உத்தரவாதம் அளித்தால் நீங்கள் இந்தியா வருவீர்களா?

நிச்சயமாக. என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. எந்த வித தவறும் நடக்கவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். நிச்சயம் என் தரப்பில் எந்த வித தவறும் நிகழவில்லை என்பதை நான் நிரூபிக்க முடியும், நான் இதனை பலமுறை கூறிவிட்டேன்.

உங்கள் கடிதத்திற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வந்ததா?

இல்லை. இதுவரை இல்லை. அது புறக்கணிக்கப்பட்டிருக்கலாம்.

எனவே உங்களுக்கு எந்த வித பதிலும் அனுப்பப்படவில்லை எனும்போது யு.ஏ.இ.யில் இந்திய தூதரக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டீர்களா?

ஆம். அவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். என்னுடைய துபாய் போனில் அவர்கள் என்னை அழைத்தனர். நான் விசாவுக்கு மனு செய்திருக்கிறேனா என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன், இதுதான் கடைசியாக நான் அவர்களிடம் பேசியது.

யார் உங்களை அழைத்தார்கள்?

குடியேற்ற செயலர்/அதிகாரியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் அவர் பெயரைக் கேட்கவில்லை. நான் ஆச்சரியமடைந்ததால் அவர் பெயரைக் கேட்கவில்லை. நான் துபாயில்தான் இருக்கிறேனா என்பதை உறுதி செய்ய அவர்கள் போன் செய்ததாகவே நான் கருதுகிறேன்.

நீங்கள் இந்தியாவுக்கு வர விருப்பம் கொள்ளாவிட்டாலும், இந்தியா-யு.ஏ.இ. இடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் உள்ளது, எனவே உங்களை யு.ஏ.இ.யிலிருந்து நாடுகடத்துவார்கள் என்று நீங்கள் கவலையடையவில்லையா?

ஆமாம். ஆனால் நான் பயந்து ஒளியப் போவதில்லை. நான் துபாயில் இருக்கிறேன், எனது நிலையை நான் நிரூபிக்கப் போகிறேன். நான் குற்றம் இழைக்கவில்லை என்பதை கோர்ட் இதுவரை ஒப்புக் கொண்டதாகவே நான் நினைக்கிறேன். ஆம் நான் பலவீனமான நிலையில்தான் உள்ளேன், ஆனால் அதற்காக ஓடி ஒளியப்போவதில்லை.

நீங்கள் கூறுவதற்கு மாறாக, இத்தாலி கோர்ட்டில் நீங்கள் குற்றமற்றவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நீங்கள் கூறும் அதே வேளையில், ஹெலிகாப்டர் பேரத்தில் உங்களது பங்கை நிரூபிக்கும் விதமான உரையாடல்களை கோர்ட் வைத்துள்ளதே?

எனக்கு எதிரான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றே நான் கூறுவேன். அது என்னுடைய கையெழுத்து கூட இல்லை. மேலும் சந்திப்புகளின் போது நான் இல்லை என்பதற்கான சாட்சியங்களும் உள்ளன. எனவே கோர்ட்டில் இந்த சாட்சியங்கள் எடுபடாது.

வாரண்டிலும் உங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறதே?

என் பெயர் எல்லா இடங்களிலும் உள்ளது. இத்தாலியில் அரசியல் ரீதியாக நான் நாதர்ன் லீகிற்கு பின்னடைவு ஏற்படுத்துவேன் என்று நம்புகின்றனர். எனவே இத்தாலியர்களுக்கு எதிர்க் கட்சியினரை காலி செய்ய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சோனியா காந்திக்கு எதிராக சாட்சி இருப்பதாக நம்புவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இது மிகவும் தூண்டக்கூடிய ஒரு விவகாரம் எனவேதான் என் பெயர் அனைத்து இடங்களிலும் அடிபடுகிறது.

சோனியா காந்தி குடும்பத்தினரை உங்களுக்குத் தெரியுமா?

இல்லை. ஆனால் இதற்காக நான் பெருமைப்படப்போவதுமில்லை. எனக்கும் என் தந்தைக்கும் உறவுமுறைகள் சரியாக இல்லை, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்து கொண்டிருந்தோம். அதனால் வாழ்க்கையில் அந்தப் பகுதியை அவர் எனக்கு காட்டவேயில்லை (சோனியா குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு) அவருக்கு பற்பல அரசியல்வாதிகளைத் தெரியும். இந்திய எதிர்க் கட்சியில் அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. தென் ஆப்பிரிக்காவில் அவருக்கு பெரிய தலைவர்களை தெரியும். ஆனால் அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னைக் காப்பற்றும் விஷயம் என்னவெனில் சோனியா காந்தி குடும்பத்தினரில் நான் என் வாழ்நாளில் இதுவரை ஒருவரையும் சந்தித்ததேயில்லை என்பதே.

சோனியா காந்தி குடும்பத்தினரில் ஒருவரைக் கூட நீங்கள் சந்தித்ததில்லை என்பதில் அவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தருகிறீர்கள். இங்கு வாழ்ந்துள்ளீர்கள். அரசாங்கத்தில் நிறைய பேரை தெரிந்து வைத்துள்ளீர்களே?

ஆமாம். ஆனால் இது சாத்தியமற்றதாகவே ஒலிக்கும். எந்த விடுதியிலும், பார்ட்டியிலும் நான் சந்தித்ததில்லை. அந்தக் குடும்பத்தினரில் ஒருவரைக் கூட நான் சந்தித்ததில்லை என்பதுதான் எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். நான் சந்தித்திருந்தால், நாங்கள் இது குறித்து விவாதித்திருக்க வாய்ப்பிருப்பதாக நீங்கள் கருத இடமுண்டு. நான் அவர்களை சந்தித்ததில்லை, போன் அழைப்பு, கடிதம், மெசேஜ் என்று எதுவும் எங்களுக்கிடையே நடந்ததில்லை.

ஆனால், அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் நீங்கள் தொடர்பிலிருந்தீர்கள்?

உண்மையில் இல்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற சிலரை அவர்கள் நிபுணத்துவத்துக்காகவும் தகவலுக்காகவும் சந்தித்ததுண்டு. அவர்களுடனான எனது ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அவை பார்க்கப்பட்டும் உள்ளன. எந்தத் தவறும் நிகழவில்லை.

அந்த ஓய்வு பெற்ற நபரின் பெயரைக் கூற முடியுமா?

அவர்களது பெயர்கள் உங்கள் செய்தித்தாள்களில் வந்ததுதான். நான் யாரையும் சிக்கலில் மாட்டி விட விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் நேர்மையானவர்கள். ஒரு தவறும் செய்யாததற்காக அவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. சிபிஐ அவர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. தவறு நிகழ்ந்திருந்தால் எனக்கு எதிரான கோர்ட் ஆவணங்களில் என் பெயர் இருந்திருக்கும்.

செப்டம்பர் 2015-ல் மோடியும் இத்தாலி பிரதமரும் சந்தித்தனர் என்றுகூறியுள்ளீர்கள். இது கூடுதலான கோரலாகத் தெரிகிறதே? இது பற்றி எங்களுக்குக் கூற முடியுமா?

ஃபின்மெக்கானிக்கா-அகஸ்தா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் நான் பேச்சுவார்த்தையில் இருந்த காலகட்டம் அது, ஆனால் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. உபகரணத்தை ஸ்டோரேஜ் செய்வது தொடர்பாக அவர்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. நாங்கள் கோர்ட் மூலமாக இதற்கு தீர்வு கண்டோம். முதல் தொகை அளிக்கப்பட்டது, இரண்டாவது தொகையை அளிக்கும் போது, நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தொகைக்கு ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் விலகுகிறோம் என்று திடீரென கூறினர். அதாவது அவர்கள் இது குறித்து என்னிடம் இனி பேசப்போவதில்லை என்று கூறினர்.

இது நடந்தது ஆகஸ்ட்-செப்டம்பர் 2015. நாங்கள் உண்மையில் ஆச்சரியமடைந்தோம். எனவே நான் எனது சட்ட ஆலோசகர்களிடம் இது பற்றி அறியுமாறு கோரினேன், அப்போது அவர்கள் நியூயார்க்கில் கூட்டம் ஒன்று நடந்தது என்று தெரிவித்தனர். எனவே நியூயார்க் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிய முயற்சி செய்தோம். அப்போது 3 தனித் தனியான தகவல்களின் அடிப்படையில் ஐநா-வில் பிரதமர் மோடியும் இத்தாலி பிரதமரும் சந்தித்துக் கொண்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தாலியக் கடற்படை வீரர்கள் விவகாரமும் இருந்தது. விவிஐபி காப்டர் ஒப்பந்தத்தில் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எதிராக சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், இத்தாலியக் கடற்படை வீரர்கள் விவகாரத்தில் உதவுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நீங்கள் கூறும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததா? உங்களிடம் இதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததா என்பதற்கு எளிதில் விடையளிக்க முடியும். அந்தச் சந்திப்பு நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் அந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது மற்ற சந்திப்புகளை இருவரும் (பிரதமர்கள்) வேறு நேரத்திற்கு மாற்றி அமைக்க நேரிடும் வகையில் நீண்ட நேரம் அந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தவறு எங்கு நிகழ்ந்ததென்றால், அதிகாரிகள் மற்ற சந்திப்புகளின் நேரத்தை மாற்றி அமைக்கும் போது இந்த இரு பிரதமர்கள் சந்திப்பும் நீண்ட நேரம் சென்றதைக் காரணமாகத் தெரிவித்தனர். எனவே சந்திப்பு நிகழ்ந்தது உண்மையென்றால், அங்கு என்ன விவாதிக்கப்பட்டது என்பதும் தெளிவுதானே.

நீங்கள் கூறும் இந்தச் சந்திப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. நாங்களும் பிரதமருடன் அங்கு வந்திருந்த அதிகாரிகளிடத்தில் பேசினோம், இது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதில் தெளிவாக இருந்தனர், ஒரு பிரதமர் இவர்கள் ஒருவருக்கும் தெரியாமல் மற்றொரு தலைவரைச் சென்று சந்திக்க வாய்ப்பில்லை...

அவர்கள் மறுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் அதனை எழுத்துபூர்வமாக தந்தார்களா? இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறுக்க விரும்புகிறதா? தூதரக மட்ட வட்டாரங்களில் உள்ள அனைவருக்கும் இது தெரியும்.

இது பற்றிய செய்திகள் மிகவும் தவறு என்பதால் இது குறித்து கருத்து கூற அரசு மறுத்துள்ளது....

கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பதற்கு இது ஒரு நல்ல வழி.

ஆனால், இந்தச் சந்திப்பிற்கான ரெக்கார்ட் நிச்சயம் எங்காவது இருக்க வேண்டும். ஒருவேளை இத்தாலி பிரதமர் அலுவலகத்தில் இருக்குமா?

அங்கு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா-இத்தாலி உறவுகளுக்குத் தடை ஏற்படுத்தும் விவகாரம் அந்த இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரமாகும் எனவே இந்த சந்திப்பு குறித்து பதிவு நிச்சயம் இருக்கும் என்றே கருதுகிறேன்.

உங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி மாற்றி அமைக்கப்பட்ட பிற சந்திப்புகள் எவை என்று கூற முடியுமா?

நான் கேள்விப்பட்ட வரையில் ஐரோப்பிய தலைவர்களுடன் நிறைய சந்திப்புகள் திட்டமிடப்பட்டிருந்தது. இப்படித்தான் அவர்கள் கூறினார்கள். மாற்றி அமைக்கப்பட்டதால்தான் இந்திய-இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு மீது முக்கியத்துவம் குவிந்தது.

என்ன தேதியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது?

செப்டம்பர் 24 அல்லது 25-ம் தேதி.

இத்தாலி அரசிடமிருந்து இது குறித்து யாராவது உங்களை அணுகினார்களா?

அதுதான். அரசு தரப்பு வழக்கறிஞர் எனக்கு சில சலுகைகளை வழங்கினார், ஆனால் அதற்காக உண்மையில்லாத ஒன்றிற்காக நான் குற்றச்சாட்டுகளுக்கு சார்பாக வாக்குமூலம் அளிக்க விரும்பவில்லை.

சோனியா காந்தி குடும்பத்தினர் குறித்து நீங்கள் தகவல் தர வேண்டும் என்று வழக்கறிஞர் உங்களை கேட்டுக் கொண்டாரா?

இல்லை. நாதர்ன் லீக் குறித்து நான் எவ்வாறு குற்றங்கூறுவேன் என்பதிலேயே அவர் கவனம் முழுதும் இருந்தது. இங்குதான் பிரச்சனை தொடங்கியது. லஞ்சம் கொடுக்கப்பட்டதா இல்லையா அதற்கான ஆதாரங்கள் பற்றி செல்ல வேண்டிய சாதாரண வழக்கு இங்குதான் அரசியல் சந்தர்ப்பவாதமாகத் திரும்பியது. இத்தாலியில் நாதர்ன் லீக் குறித்தே அனைவரும் பாய்கின்றனர், இந்தியா குறித்து அங்கு ஆர்வம் எதுவும் இல்லை.

எனவே காந்திகள் பற்றி உங்களிடம் ஒருவரும் கேட்கவில்லை?

இல்லை.

அரசியல் காழ்ப்புணர்வில் நீங்கள் சிக்கவைக்கப்பட்டதாக கருதுகிறீர்களா?

ஒன்றல்ல இரண்டு அரசியல் காழ்ப்புணர்வுக்கிடையில் நான் சிக்கியுள்ளேன். அதுவும் இரண்டு இடங்களிலும் தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் மூண்டது. பெர்லுஸ்கோனி ஏற்கெனவே பிரச்சினைகளில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ரென்ஸி அரசு ஆட்சியைப் பிடிக்க முயன்றது. அதனால் அரசியல் ரீதியாக இந்த விவகாரம் சவுகரியமானதாகப் போய்விட்டது, மற்றபடி ஒன்றும் இல்லை.

இது சரியான வாதம் அல்ல. கீழ் கோர்ட் உத்தரவை மிலன் கோர்ட் தற்போது மாற்றி அமைத்து ஆர்சி மற்றும் இருவரையும் குற்றவாளிகள் என்று கூறியுள்ளதே?

டியுனிசியாவில் உள்ள நிறுவனம் தொடர்பாக ஓவர் இன்வாய்ஸ் செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் நான் முழுதும் தொடர்புடையவனல்ல. ஆனால் தீர்ப்பில் அவர்கள் எதற்காக குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர் என்ற விவரம் உள்ளது.

இந்த வழக்கு தற்போது இத்தாலி கடற்படையினர் வழக்குடன் தொடர்பு படுத்தப்படுவது ஆச்சரியமாக இல்லையா?

மோடிக்கு இது குறித்து தவறான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவர் ஏன் தொடர்புபடுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்துவது பிரச்சினையை இன்னும் பூதாகாரப்படுத்தவே உதவும்.

அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்றால், இந்த இரு வழக்குகள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்றால் இந்நேரத்துக்கு ஏதாவது முடிவுகள் தெரிந்திருக்க வேண்டுமே?

இதற்கு என்னால் விடை கூற முடியும். இருதரப்பினரும் நம்பிக்கை இழந்த நிலையில் இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது. கடற்படையினரை இத்தாலியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சர்வதேச கோர்ட் கூறிவிட்டால், அது இந்திய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தும், இல்லை அவர்கள் இந்தியாவசமே இருக்க வேண்டும் என்று கூறினால் ஒட்டுமொத்த ஐரோப்பவும் கொதிப்படையும். எனவே கோர்ட் உத்தரவுகளுக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருநாடுகளின் கடைநிலைத் தஞ்சமே இந்த சந்திப்பு. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதாக நான் கருதவில்லை. இந்த இரு வழக்குகளையும் தொடர்பு படுத்தியிருக்க வேண்டாம் என்று இந்திய அரசு இப்போது விரும்பியிருக்கலாம். ஐநா மாதிரியான இடத்தில் இருவரும் சந்திக்கும் போது அனைவரும் பார்ப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஆனால் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்த போது யாராவது ஒரு அதிகாரி அங்கு இருந்திருக்கலாம் என்பதற்கான ஒரு பெயரைக்கூட நீங்கள் கூறவில்லையே?

நபர்களின் பெயர்களைக் கூறுவதில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே நான் கூறப்போவதில்லை.

அந்தச் சந்திப்பில் எந்த வித உடன்பாடும் ஏன் எட்டப்படவில்லை என்று நீங்கள் கூறவில்லையே?

எந்த ஒரு உடன்பாடும் ஏற்பட முடியாது, ஏனெனில் இத்தாலி பிரதமர் இதற்கு எப்படி வினையாற்றியிருப்பார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் இது அதிக விலைதான். இது சட்ட விவகாரம், இரண்டு கோர்ட்களுக்கும் பொதுவான அடிப்படை இல்லை. எனவேதான் நம்பிக்கையற்ற சூழலில்தான் இது நடந்துள்ளது என்று என்னால் ஊகிக்க முடிகிறத

காந்தி குடும்பத்தினருக்கு பணம் கைமாறவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறீர்களா?

நிச்சயமாகக் கூறுவேன்.

உறுதியாக எப்படி கூற முடிகிறது?

ஏனெனில் நான் அங்குதான் இருந்தேன். ஓவர் இன்வாய்ஸ் செய்த தொகை இத்தாலிக்குத் திரும்பிச் சென்றது. இந்த விவகாரத்திலெல்லாம் 100% உத்தரவாதமாக கூற முடியாது, ஆனால் விசாரணை சூடுபறக்க நடந்து கொண்டிருக்கும் போது இவ்வளவு பெரிய தொகையை மறைப்பது கடினம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வழக்கு போபர்ஸ் ஊழல் வழக்குடன் இணையாக வைத்து யோசிக்கப்படுவதாகும், குவாட்ரோக்கி போல தற்போது நீங்கள் என்ற கருத்திற்கு உங்கள் பதில் என்ன?


முதலில் ஒன்று கூறிவிடுகிறேன், நான் குவாட்ரோக்கி போல் கிடையாது. அவரைப்போன்ற ஒரு இத்தாலியனாக நான் இருந்தால் என்னை இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டார்கள். யு.ஏ.இ.-யில் கடந்த சில ஆண்டுகளில் 14-15 பேர்களை நாடுகடத்தியுள்ளார்கள். நான் குவாட்ரோக்கி அல்ல. அப்படியிருந்திருந்தால் நான் ஏன் என் எதிர்காலம் பற்றிய கவலையுடன் தற்போது துபாயில் உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறேன். நான் மிகவும் வசதியாக உட்கார்ந்திருக்கிறேன் என்றால் உங்களுக்கு இந்த பேட்டியை நான் கொடுத்திருக்க மாட்டேன். நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் உண்மையை வெளியே கொண்டு வந்தாக வேண்டும், குவாட்ரோக்கிக்கு இதனைச் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

இந்தியாவுக்கு வந்து சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ளலாமே என்று அனைவரும் கூறுவார்கள்...

ஆம். நீங்கள் போபர்ஸ் வழக்கு பற்றி குறிப்பிட்டீர்கள். அமிதாப் பச்சன் போன்றவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியே வந்தார். அதனால் எனது விதியும் அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று நான் கவலையடைகிறேன். என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியை இது விழுங்கி விடும். அதன் பிறகு நான் குற்றமற்றவர் என்பார்கள். ஓவர் இன்வாய்சின் விவகாரத்தில் ஆர்சி குற்றவாளி என்று கோர்ட் கூறினாலும் நிறுவனம் அவரிடமிருந்த பணத்தைத் திரும்பப் பெற எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை, ஆனால் என்னிடமிருந்து 10 மில்லியன் டாலர்களை திரும்பப் பெற விரும்புகின்றனர். நிறுவனத்திற்கு உண்மையில் இது குறித்து அக்கறை இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பிரதமர் ரென்ஸிக்கு பிரதமர் மோடி கடற்படையினர் விவகாரத்தில் காட்ட முன்வந்த சலுகை பற்றி நீங்கள் கோருகிறீர்கள், வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பிரிட்டன் நிறுவனம் என்பதால் பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் அத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி மேற்கொண்டிருப்பார் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததா?

இல்லை. எனக்கு பிரிட்டனில் உயர்மட்டத்தில் நிறைய தொடர்புகள் உண்டு. எனது நெருங்கிய உறவினர் ஒருவர் ராணியின் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு சமயத்தில் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்தார். எனவே பிரதமர் மோடி கேமரூனைச் சந்தித்த போது இத்தகைய நிகழ்வுகள் நடந்திருந்தால் எனக்கு அது பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும், ஆனால் அப்படி நடைபெறவில்லை.

எனவே நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவாதம் தேவை இல்லையா?

நேரடியாக கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் இங்கு வர வேண்டும் என்பதை விரும்புகிறேன். என்னுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அகற்றுவது மட்டுமல்ல, இந்தியாவின் நற்பெயரையும் உறுதி செய்வதே என் நோக்கம். அதிகாரிகள், அரசியல்வாதிகள், யாரும் இதில் ஈடுபடவில்லை. இது ஒரு சிறந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தமாகும். இது சரியான தெரிவுதான்.

தமிழில்:ஆர்.முத்துக்குமார்

| விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு இடைத்தரகர் மைக்கேல் எழுதிய கடிதத்தின் ஆங்கில வடிவம் > >VVIP chopper deal: alleged middleman wrote to Modi |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x