

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மும்பையின் ராய்கட் வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பைகுலா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்திராணி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கைதான நாள் முதல் இதுவரை 18 கிலோ வரை எடை குறைந்திருப்பதாகவும், உடல் நலனை கருத்தில் கொண்டும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரத் பதாமி, ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் அவர், ‘‘சிறையில் இந்திராணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 12 மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பால், பழங்கள், வேகவைக்கப்பட்ட காய்கறிகள் என அவரது உடல்நலனுக்காக அதிக புரதம் கொண்ட உணவுகளும் சிறையில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலை இயல்பு நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கலாம்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய், தற்போதைய கணவரும், முன்னாள் ஸ்டார் இந்தியா டிவியின் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.