Published : 01 Apr 2022 07:55 AM
Last Updated : 01 Apr 2022 07:55 AM

கேரளாவில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் மேற்கு வங்கத்தில் உள்ள சொந்த ஊருக்கு படிப்பைத் தொடர தனியாக சென்ற சிறுமி

இடுக்கி: படிப்பைத் தொடர்வதற்காக பெற்றோருக்குத் தெரியாமல் கேரளாவில் இருந்து 14 வயது சிறுமி மேற்கு வங்கம் சென்றார்.

மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பெராய். மிட்னாப்பூரில் உள்ளடங்கிய கேரி என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து பள்ளியில் படித்து வந்தாள். மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்தில் விவசாயம், மீன்பிடித்தல் முக்கிய தொழில். ஆண்களில் பலருக்கு வேலையில்லை.

இதனால், கேரளாவுக்கு தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிய அங்கிருந்து பல குடும்பங்கள் கேரளாவில் இடுக்கி மாவட்டத்துக்கு செல்கின்றனர். சிறுமி பெராய் பள்ளி விடுமுறையில் பெற்றோருடன் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதிக்கு வந்துள்ளார். பெற்றோருடன் ஏலக்காய் எஸ்டேட்டில் அவர்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.

பள்ளிகள் திறந்த நிலையில், மேற்கு வங்கம் திரும்பி பள்ளிக்குச்செல்ல விரும்பிய சிறுமி பெராயைபெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், இடுக்கியில் தங்கள் வீடு அருகே வசித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை அறிந்து அவர்களிடம் தனது விருப்பத்தை பெராய் கூறியிருக்கிறார்.

அவர்களும் சம்மதிக்கவே பெற்றோருக்குத் தெரியாமல் அந்தக் குடும்பத்தினருடன் மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூருக்கு ரயிலில் சென்றார். ரயில் நிலையத்தில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து தான் மேற்கு வங்கம் திரும்பியதை சிறுமி கூறியிருக்கிறார். அங்கிருந்து தனது சொந்த கிராமத்துக்கு பெராய் தனியே சென்றுவிட்டார்.

இதனிடையே, பெராயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெராயைத் தேடி கேரள போலீஸார் மேற்குவங்கத்தின் கேரி கிராமத்துக்கு வந்தனர். அங்கு தனதுதாத்தா, பாட்டியுடன் சிறுமி தங்கியிருப்பது தெரிந்தது. பள்ளியில் சிறுமி படிப்பைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுமி பெராய் இடுக்கியில் இருந்து 2,000 கி.மீ.தொலைவில் மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு தனியாக வந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x