ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் 21,000 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர்

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் 21,000 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக அரசு தடை விதித்தது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பினர். கர்நாடகா முழுவதும் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் மட்டுமே முதல் நாள் தேர்வு எழுதினர். 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு 3 ஆயிரத்து 769 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுதாதவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கல்வியாளர்கள், " ஹிஜாப் தடை காரணமாகவே தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மாணவிகள் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது"என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவி ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு ஹிஜாப், கல்வி இரண்டும் முக்கியம். ஆனால் கல்விக்காக ஹிஜாபை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு பெரும்பாலானவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். நான் ஹிஜாபை அகற்றிவிட்டு தேர்வு எழுதினேன். ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதியதால் என்னால் முழு கவனத்தையும் தேர்வில் செலுத்த முடியவில்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in