

கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் களை அகற்றாத பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு தெலங்கானா போலீஸார் அபராதம் விதித்தனர்.
ஹைதராபாதில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்ததைத் தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் 1 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் போக்குவரத்து விதிகளின்படி கார் கண்ணாடிகளில் உள்ள கருப்பு ஸ்டிக்கர் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் அமீர் பேட் பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அந்த வழியாக காரில் வந்தார். அந்தக் காரில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றப்படாமல் இருந்ததைக் கண்ட போலீஸார், காரை நிறுத்தி ரூ.700 அபராதம் விதித்தனர். ஆனால் ஸ்டிக்கரை உடனடியாக அகற்றி விடுகிறேன் என கார் ஓட்டுநர் கூறிய போதிலும், இதுவரை ஸ்டிக்கர் அகற்றப் படாமல் இருந்ததற்காகத்தான் இந்த அபராதம் என போலீஸார் கூறினர்.