

மது விலக்கு கொள்கையில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் புதிய பார்கள் திறக்க அனுமதி வழங்க மாட்டோம் என்று கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மதுவிலக்கு பிரச்சாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
மது விலக்கு கொள்கை விஷயத்தில் இடதுசாரி முன்னணிக்கு எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கேரளாவில் புதிய பார்கள் தொடங்க அனுமதி வழங்க மாட்டோம். மேலும், தற்போதுள்ள மது விநியோக முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவோம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி, முழுமையாக மதுவை விலக்குவோம்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘கேரளாவில் மூடப்பட்ட பார்கள் மீண்டும் திறக்கப்பட மாட்டாது’’ என்றுதான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் என்ன குழப்பம் இருக்கிறது.
மதுவிலக்கு விஷயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் முக்கிய திட்டமாக உள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி சொல்வது போல் கேரளாவில் மது பார்கள் மூடப்படவில்லை. அங்கு குறைந்த வீரியம் கொண்ட (ஆல்கஹால் குறைவான) மது விற்கப்படுகிறது. தவிர கள்ளச் சாராயமும் விற்கப்படுகிறது. இப்போது வீடுகள், வாகனங்கள் எல்லாம் ‘மினி பார்’ போலாகிவிட்டன.
இவ்வாறு அச்சுதானந்தன் கூறியுள்ளார்.