Published : 28 Mar 2022 07:23 AM
Last Updated : 28 Mar 2022 07:23 AM

திருப்பதி அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

அனந்தபூர்: திருப்பதி அருகே நிச்சயதார்த்தத்துக்கு சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்தவர்கள், திருச்சானூரில் நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

மணமகனின் தந்தை, உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் திருப்பதி - பீலேர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பாகராபேட்டை மலைப்பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மேலே தூக்கி வந்தனர். இந்த விபத்தில் மணமகனின் தந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்ற அனைவரும் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ராமசந்திரா ரெட்டி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். விபத்தில் பத்திரிகையாளர் ஆதிநாராயணா ரெட்டி (45) என்பவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இவர் சாக் ஷி மற்றும் பிரஜாசக்தி தெலுங்கு பத்திரிகைகளில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

பிரதமர் இரங்கல்

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். உயிரிழந்த பத்திரிகையாளர் ஆதிநாராயணா உட்பட 8 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஷைலஜாநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்றொரு விபத்து

பேருந்து விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே திருப்பதி - சந்திரகிரி நெடுஞ்சாலையில் ஐத்தேபள்ளி அருகே மினி வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் ஐத்தேபள்ளியில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களும் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்திரகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x