Published : 27 Mar 2022 06:49 AM
Last Updated : 27 Mar 2022 06:49 AM

உ.பி.யின் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 19,132 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் மிக அதிக அளவாக உ.பி.யில் சுமார் 16,500 மதரஸாக்கள் அரசு நிதியுதவி பெற்று செயல்படுகின்றன. இதுதவிர, அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை உ.பி.யில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

இவற்றில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன், பிரார்த்தனையாக, தரானா எனும் உருது மொழி இஸ்லாமியப் பாடல் பாடப்படுகிறது. இதை, 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மட்டுமே பாடுவார்கள். மற்ற வகுப்பில் உள்ளவர்கள் நேரடியாக தங்கள் வகுப்பறைக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்தச்சூழலில், உ.பி. மாநில அரசின் மதரஸாக்கள் கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில், “அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத என அனைத்து மதரஸாக்களிலும் காலை வகுப்புகளுக்கு முன், பிரார்த்தனை பாடலுக்கு பிறகு தேசிய கீதமும் பாட வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதரஸாக்களில் தேசியகீதம், ஆகஸ்ட் 15, ஜனவரி 26 போன்ற முக்கிய தினங்களின் நிகழ்ச்சிகளில் மட்டும் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசியகீதத்தை மதரஸா மாணவர்களுடன் அதன் ஆசிரியர்களும் இணைந்து பாட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. உ.பி. அரசின் இந்த உத்தரவு, மதரஸாக்களில் வரும் கல்வி ஆண்டு முதல் அமலாக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x