

இராக் நாட்டின் மோசுல் நகரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்திய தொழிலாளர்கள் பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அந்நாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது:
கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்டுவர அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. பாக்தாதில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் இடைவிடாது தொடர்பில் உள்ளது. பிணைக் கைதிகளாக இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து விட்டதாக இராக் வெளியுறவு அமைச்சகம் எங்களிடம் தெரிவித்துள்ளது.
பிற நாட்டவர்களுடன் இந்தியர்களையும் தீவிரவாதிகள் சேர்த்து அடைத்து வைத்துள்ளனர்.அது பற்றி இராக் அரசு தெரிவித்த தகவலை பகிர்ந்துகொள்ள முடியாது.
இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்று கேட்கிறீர்கள். பிணைக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்.
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தையும் பிற வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். வடக்கு இராக் நகரான மோசுலில் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டி ருந்தபோது ஐஎஸ்ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா) தீவிரவாதிகள் இவர்களை கடத்தினர் என தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள் மற்றும் சன்னி தீவிரவாதிகள் கைப்பற்றிய திக்ரித் நகரில் தவிக்கும் 46 இந்திய நர்ஸ் பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு பற்றி அச்சம் எழுந்துள்ளதால் நெருக்கடி கால மேலாண்மை குழு இருமுறை கூடி விவாதித்தது. இந்த கூட்டங்களுக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை வகித்தார்.
வளைகுடா பிராந்தியத்துக்கான (கிழக்குப்பிரிவு) செயலர் பொறுப்பு வகிக்கும் அனில் வாத்வா, இராக் தூதர் அகமது தஹ்சினுடன் இரு தடவை பேசினார். கடத்தப்பட்ட வர்களை ஒப்படைக்க தீவிரவா திகள் பிணைத் தொகை கோரு கின்றனரா என்பது பற்றி தகவல் இல்லை. தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நமது நாட்டவரின் பாது காப்பை உறுதி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வோம்.
தாயகம் திரும்ப முன்வரும் இந்தியர்களுக்கு பாக்தாதில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது. கலவரப் பகுதிகளில் தவிப்போரை மீட்க வாகனப் போக்குவரத்தை பயன்படுத்துவது கடினமானது. உள்ளூர் அதிகாரிகளின் கருத்து கேட்டு வேறு நல்ல மாற்று வழிகள் பற்றி யோசிக்கப்படும். இராக் தொடர்பான தகவல் வழங்க அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 130 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் 15 இராக்கிலிருந்து வந்தன.
இவ்வாறு அக்பருதீன் கூறினார்.
இதனிடையே, இராக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அந்நாட்டுக்கான முன்னாள் இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி பாக்தாத் சென்றடைந்தார்.