Published : 26 Mar 2022 07:47 AM
Last Updated : 26 Mar 2022 07:47 AM

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய, சீன உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. இன்றுவரை லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது எல்லை பிரச்சினை, சர்வதேச நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து அமைச்சர்வாங் யீ அண்மையில் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு அவரிடம் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு தனியாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2020 ஏப்ரலில் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் சீன வெளியுறவு அமைச்சருடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காஷ்மீர் குறித்து அமைச்சர் வாங் யீ கூறிய கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. வேறோரு நாட்டுக்கு (பாகிஸ்தான்) சாதகமாக சீனாவின் வெளியுறவு கொள்கை இருக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தினோம்.

இந்திய- பசிபிக் கடல் பிராந்தியம், குவாட் குறித்து எதுவும் பேசவில்லை. இப்போதைய நிலையில் இந்திய, சீன உறவு சுமுகமாக இல்லை என்பதே உண்மை. எல்லையில் அமைதியை நிலைநாட்ட 1993-96-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை உண்மையுடன் அமல் செய்ய வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்திய, சீன உறவில் சுமுகநிலையை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகவில்லை. எல்லையில் இருந்து சீன படைகள் முழுமையாக வாபஸ் பெற வேண்டும்.

சீனாவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், அந்த நாட்டு அரசின் கரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x