Published : 26 Mar 2022 07:36 AM
Last Updated : 26 Mar 2022 07:36 AM
பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைவார்கள் என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா சட்டப்பேரவையில் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பேசுகையில், "அரசியலில் ஒருவர் எந்த சித்தாந்தத்தை பின்பற்றினாலும் மற்றவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக,காங்கிரஸ் என எந்த அமைப்பைசேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற அமைப்பினரை தரக்குறைவாக பேசக் கூடாது''என்றார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் காகேரி, ''ஏன் திடீரென எங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி பேசுகிறீர்கள்?''என்றார்.
அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, ‘‘பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு எங்கள் ஆர்எஸ்எஸ் எனக் கூறுவது சரியில்லை'' என்றார்.
அதற்கு பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் காகேரி, ‘‘நான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவன் என்பதால் அவ்வாறு கூறினேன். அதிலென்ன தவறு இருக்கிறது? விரைவில் நீங்களும் ஆர்எஸ்எஸ் எனக்கானது என பேசுவீர்கள்''என்றார்.
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது, யு.டி. காதர், பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா, ‘‘எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை'' என கூறினார்.
எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
இதற்கும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. நாடு முழுவதும் தேசப் பற்றை வளர்ப்பது, சமூக சேவை என்ற நோக்கத்துடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT