Published : 26 Mar 2022 08:13 AM
Last Updated : 26 Mar 2022 08:13 AM
புதுடெல்லி: கடந்த 1990-களில் காஷ்மீரில் இருந்து பண்டிட் சமூகத்தினர் வெளியேறியது குறித்த திரைப் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் மற்றும் தெரிந்த குற்றவாளிகள் மீது விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ்
1990-களில் காஷ்மீரில் இந்துபண்டிட்களுக்கு எதிரான தீவிரவாததாக்குதல்களை தொடர்ந்து, லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த உண்மைச் சம்வங்களை அடிப்படையாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பண்டிதர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ‘ரூட்ஸ் இன் காஷ்மீர்’ என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
5 ஆண்டுக்கு பிறகு..
கடந்த 2017-ல் இந்தஅமைப்பு தாக்கல் செய்த பொது நலவழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலம் கடந்துவிட்டாலும் பொதுநல வழக்கை நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்கச் செய்ய முடியும் என அந்த அமைப்பு நம்புகிறது.
1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் 30ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்கப்படும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்களை ஏன் விசாரிக்க கூடாது என இந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது.
கடந்த 2017-ல் இந்த அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 1989 - 90, 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளில் யாசின் மாலிக், பரூக் அகமது தார், ஜாவேத் நல்கா போன்றதீவிரவாதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு காஷ்மீர் போலீஸாரால் விசாரிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியது.
இந்த வழக்குகளை சிபிஐ, என்ஐஏ அல்லது உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் வேறு ஏதேனும் சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT