ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மாலத்தீவுகள் உறுதி

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மாலத்தீவுகள் உறுதி
Updated on
1 min read

இந்தியா மாலத்தீவுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத் தானது.

இதுதவிர, இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பது, புராதன மசூதிகளை பாதுகாப்பது மற்றும் சுற்றுலா, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா வந்துள்ள மாலத் தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து பிரதமர் மோடி பேசும்போது, “இந்தியா மாலத்தீவுகள் இடையிலான ஒத்துழைப்பில் இது வரலாற்று சிறப்புமிக்க நாள். எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தோம். இத்துறைகளில் இருதரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கு ஓர் ஒப்பந்தம் வகை செய்கிறது. வரிகள் தொடர்பாக உள்நாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் பரஸ்பரம் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள மற்றொரு உடன்பாடு வகை செய்கிறது.

மாலத்தீவுகளில் உள்ள புராதன மசூதிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கும் மற்றும் புனரமைக்கும் பணியிலும், விண்வெளி ஆய்வு மற்றும் சுற்றுலாவில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தனித்தனியே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in