

தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத் துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன. இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள் வாதிட்டனர்.
இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித் தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதி பதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான மனுக்கள் நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்வது அவசியம்.
மக்களின் பெரும்பான்மை கருத்து தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த தீர்ப்பை பிறப்பிக்கும் முன்பு சில விதிகள் பின்பற்றப்படவில்லை. தீர்ப்பளிக்கும் முன்பு, நீதிபதிகளுக்குள் நடக்க வேண்டிய ஆலோசனை நடைபெற வில்லை. இந்த காரணங்களால், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுகிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு நடக்குமா?
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 60-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத் தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறுமா அல்லது தற்போதைய நிலை தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா விடம் கேட்டபோது, ‘‘மே முதல்வாரத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு இன்னும் ஒருமாதம் தான் உள்ளது. குறைந்த கால அவகாசம் இருப்பதால், இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது’’ என்றார்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும். பல் மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு. இதுதவிர, 1,000-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.