’புரோகிதர் இல்லா இந்து திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழகம்’ - திமுக எம்.பி. தமிழச்சி பெருமிதம்

தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப் படம்.
தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழகம்தான் என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியம் பெருமிதம் கொண்டார்.

தென் சென்னை தொகுதியின் எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசுகையில், "தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட பேரறிஞர்களால் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் அடித்தளமிட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடந்த முக்கிய சமூக மாற்றங்களில் சுயமரியாதை திருமண முறையும் ஒன்று. வழக்கமான திருமணங்களில் பிராமணப் புரோகிதர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் தேவையற்ற சடங்குகளை வற்புறுத்துகிறார்கள். இதனால் குடும்பங்கள் கடன் வலையில் சிக்குகின்றன. வரதட்சணை கொடுமையும் மிக அதிகமாக இருந்தது.

பிராமணப் புரோகிதர்கள் இல்லாமல் திருமணங்களை நடத்தினால் மட்டுமே தேவையற்ற சடங்குகளையும், செலவுகளையும் தவிர்க்க முடியும் என்று பெரியார் நினைத்தார்.

சுயமரியாதை இயக்கம் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள், விதவை மறுமணங்களை ஊக்குவித்தது. தன் 11 வயதில் விதவையான சிவகாமி அம்மையார் போன்றோர் மறுமணக்கொள்கையால் புதுவாழ்வு பெற்றனர்.

மேலும், அன்றைய இந்து திருமணச்சடங்குகள் தமிழ் மக்களுக்கு புரியாத சம்ஸ்கிருதத்தில் இருந்தன. சுயமரியாதைத் திருமணங்கள் 1928 முதல் நடைமுறையில் இருந்தன. எனினும், பிராமணப் புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழகம்தான்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in