

நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் விட்டு அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசும்போது, “நீதித்துறையின் வேலைப்பளு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 3 கோடி வழக்குகள் தேங்கி உள்ளன. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் தொடர்பான வழக்கு காரணமாக நீதிபதிகளின் நியமனத்தில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், 434 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. வழக்குகளை முடிக்க முடியாமல் நீதித்துறை திணறி வருகிறது. நீதி கிடைக்காமல் விசாரணை நிலையிலேயே அப்பாவி மக்கள் சிறைகளில் வாடி வருகின்றனர். (இவ்வாறு பேசும்போது அவர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்). சிறைகள் நிரம்பி வழிகின்றன” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் மத்திய அரசை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறையை குறை சொன்னால் மட்டும் போதாது. மொத்த பளுவையும் நீதித்துறை மீது சுமத்த கூடாது. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் குறித்த உத்தரவு வெளியானபின், பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் நியமனத்தில் இன்னும் 169 நியமனங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதை இன்னும் எத்தனை காலம்தான் நிலுவையில் வைப்பீர்கள்? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் இல்லாமல் எப்படி இந்த நிலையை சமாளிக்க முடியும்?
10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள்
கடந்த 1987-ம் ஆண்டு சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அல்தமஸ் கபீர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, 2013-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுபற்றி கடிதம் எழுதினார். அவர் பதில் கடிதத்தில், மாநில அரசுகள்தான் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். மாநில அரசுகளைக் கேட்டால், மத்திய அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்கின்றன. அமெரிக்காவில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆண்டுக்கு 81 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்து, இவ்வளவு நெருக்கடியில் எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்கின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய தூணாக உள்ள நீதித் துறையை காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறினார். அவரது அரைமணி நேர பேச்சில் பலமுறை உருக்கமாக கண்ணீர் சிந்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 87-ம் ஆண்டு சொல்லப்பட்ட ஒரு விஷயத்தில் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை என்றால் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. இதுகுறித்து அரசும், நீதித்துறையும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இதுபோன்ற நிலைக்கு வழக்கொழிந்த சட்டங்களே காரணம். முரண்பட்ட பல்வேறு தீர்ப்புகளால் குழப்பம் ஏற்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்று பதிலளித்தார்.