

ஐடிபிஐ வங்கி கடன் தொகையில் ரூ.430 கோடியை வெளிநாட்டில் சொத்து வாங்க மல்லையா பயன்படுத்தினார் என்ற அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை எதிர்த்து கிங்பிஷர் நிறுவனம் நிதிமுறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
இது குறித்து கிங்பிஷர் சார்பாக வழக்கறிஞர் பிரணவ் பதேகா கூறும்போது, “அமலாக்கத் துறையின் இந்த தகவல் வழக்கு நடைமுறைகளை தீர்மானிப்பதாக அமைந்து விடும் என்பதால் நாங்கள் தவறைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் தவறானவை, சரியற்றவை” என்றார்.
சிறப்பு நீதிபதி பி.ஆர்.பாவ்கே தற்போது மல்லையாவுக்கு பிணையில்லாத கைது வாரண்ட் பிறப்பிக்க அமலாக்கத் துறையின் செய்திருந்த மனுவை விசாரித்து வருகிறார்.
மல்லையா மீது பிணையற்ற கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுமா என்பது இன்று மாலை தெரியவரும். இந்த நிலையில்தான் கிங்பிஷர் நிறுவனம் தன் தரப்பை எடுத்துரைத்துள்ளது.
கடந்த சனியன்று அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் கூறும்போது, ஐடிபிஐ வங்கியிலிருந்து கிங்பிஷர் பெற்ற ரூ.950 கோடி கடன் தொகையில் ரூ.430 கோடியை அயல்நாட்டில் சொத்து வாங்க மல்லையா எடுத்துச் சென்றார் என்று கடும் குற்றம் சாட்டியிருந்தது. அதாவது கடன் தொகை அது அளிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் சொந்த சொத்துக்குவிப்புக்கு பயன்படுத்தப்பட்டது என்று அமலாக்கத் துறை.
60 வயது தொழிலதிபரான மல்லையா, தற்போது பிரிட்டனில் இருப்பதாக தெரிகிறது. அமலாக்கத் துறையினர் 3 அழைப்பாணை விடுத்தும் விஜய் மல்லையா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் அவரது பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கத் துறை வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தது. வெளியுறவு அமைச்சகம் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு இடைமுடக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.
கிங்பிஷர் நிறுவனத்தின் நிதி விவரங்களை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது