

மராத்வாதா பகுதியில் வறட்சி நிலவரங்களைப் பார்வையிடச் சென்ற மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, அங்கு செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டதை சிவசேனா கடுமையாகச் சாடியுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பங்கஜா தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
மஞ்சாரா நதியின் பின்னணியில் பங்கஜா முண்டே செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே கூறும்போது, “மகாராஷ்டிரா கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. பெண்களும் குழந்தைகளும் தங்கள் வீட்டிலிருந்து நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சிவசேனா இந்த வறட்சிப் பகுதிகளில் நிறைய சேவைகளை ஆற்றி வருகிறது. இப்படிப்பட்ட மோசமான சூழலில் அமைச்சர்கள் அங்கு சென்று செல்ஃபி எடுத்துக் கொள்ளும் செயல் சரிதானா?
இப்படிப்பட்ட பயணத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக செல்ஃபிக்கள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா முழுதும் கடும் வறட்சி நிலவுகிறது. செல்ஃபிக்கான தேவையே இல்லை. பெண்கள்தான் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது, ஆனால் அவர்களும் செல்ஃபி எடுத்துக் கொள்வது விசித்திரமாக உள்ளது” என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல் நஜீர் ஸகாரியா கூறும்போது, “தான் மக்கள் நலன்களுக்காகவே இருக்கிறேன் என்பதை காண்பித்துக் கொள்ள அமைச்சர் பங்கஜா முண்டே செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அதனை சமூக ஊடகத்திலும் வெளியிட்டது வெட்கக் கேடான செயல், இப்படி நாடகத்தனமாக அமைச்சர்கள் நடந்து கொள்ளக் கூடாது, அவர்கள் அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும்போது, “இந்த அரசு வறட்சி நிலவரங்கள் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பல மாதங்களுக்கு முன்பே போதுமான தகவல்கள் வெளியான பிறகும் கூட இந்த அரசு எவ்வித திட்டமிடுதலும் செய்யவில்லை. பீட், லாத்தூர் ஆகியவற்றின் கார்டியன் அமைச்சராக இருந்தவரே பங்கஜா முண்டே, ஆனால் கடந்த ஓராண்டாக சீராய்வுக் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது செல்ஃபிகளை எடுத்துக் கொண்டு விவசாயிகளை கேலி செய்துள்ளார்” என்று சாடினார்.
கடந்த வாரம் வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் காட்சே லாத்தூர் மாவட்டத்தின் வறட்சிக் கிராமம் ஒன்றைப் பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றார். இதற்கான ஹெலிபேடை உருவாக்க சுமார் 10,000 லிட்டர் தண்ணீர் விரயமானது. இந்த விவகாரமும் கடுமையாகச் சாடப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்ஃபி விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆனால், அமைச்சர் பங்கஜா முண்டே தனது விளக்கத்தில், “எனது லாத்தூர் பயணத்தின் போது வறட்சி நிவாரணங்களுக்காக நான் நிறைய சீராய்வுக் கூட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளேன். நீருக்காக ஆழமாகத் தோண்டிய எங்களது முயற்சி துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியில் முடிந்தது. ஞாயிறன்று மஞ்சாரா நதிப் பகுதிக்கு நான் பார்வையிட சென்றேன். அப்போது நதியில் சிறுபகுதியில் தண்ணீர் ஊறியிருந்ததைக் கண்டேன். எனவே பணிகள் நடைபெற்றுள்ளது பற்றியும், அங்கு நீர் ஊறியிருப்பது பற்றியும் பதிவு செய்ய நான் சில புகைப்படங்களை எடுத்தேன் (பொதுவாக நான் அப்படி செய்ததில்லை). பாலைவனத்தில் பசுஞ்சோலை போல் வறண்ட பகுதியில் தண்ணீர் ஊறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் எனது இந்தச் செயலை பலர் வேறுவிதமாக திருகிவிட்டனர். என்னுடைய மேக்-அப் கலைந்ததாக சிலர் குறிப்பிட்டனர், நான் வாயடைத்துப் போனேன். இப்படி செய்திகளை திருகி ஆளுமைக் கொலையில் ஈடுபடுவதால் யாருக்கு என்ன பயன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி இதனாலெல்லாம் விவசாயிகளுக்கு பயன் ஏற்பட்டுவிடுமா? நான் இந்தப் போட்டோக்களை 45 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயிலில் எடுத்தேன். இதில் உற்சாகம் ஏதுமில்லை, ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றுக்கான அறிகுறி குறித்து ஒரு திருப்தி அவ்வளவே” என்றார்.