Published : 24 Mar 2022 08:58 AM
Last Updated : 24 Mar 2022 08:58 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபல துலிப் மலர்த் தோட்டம் நேற்று பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் நகரில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி, இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இது,நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் திருவிழாவுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். துலிப் விழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மலர்த்தோட்டம் நேற்று பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் ஏ.கே.மேத்தா இதனைதிறந்து வைத்தார். நாட்டில் கரோனா நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட பிறகுகாஷ்மீருக்கு இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப்பருவத்தில் சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதில் துலிப் மலர்த் தோட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மலர் வளர்ப்புத் துறை ஆணையர் ஷேக் பயாஸ் கூறும்போது, “துலிப் மலர்த் தோட்டப் பணியில் கடந்த 9 மாதங்களாக ஈடுபட்டு வந்தோம். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக சுற்றுலாப் பயணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
முதல் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தோட்டத்தில் குவிந்தனர். அங்கு அவர்களை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT