Published : 23 Mar 2022 03:22 PM
Last Updated : 23 Mar 2022 03:22 PM

இந்தியாவில் மார்ச் 31-ல் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்; மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி மட்டும் அவசியம்

புதுடெல்லி: நாட்டில் நீடித்து வரும் கரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்றும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனாவின் முதல் அலையில் தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்த பொதுமுடக்கம் பின்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் அலையின் போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் மூன்றாவது அலை கரோனா பரவல் பிப்ரவரியில் முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் படிப்படியாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் சில கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து, கோவிட் 19 கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அமல்படுத்தபட்ட பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் விதிகளை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் முகக்கவசம் அணிய, தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறை உத்தரவுகளை வெளியிட்டது.

பிப்ரவரி 25ம் தேதியுடன் முடிவடைந்த உத்தரவிற்கு பின்னர் உள்துறை அமைச்சகம் வேறு எந்த புதிய உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. பிப்ரவரி 25ம் தேதிக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட கரோனா கட்டுப்பாடு உத்தரவுகள் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இருந்தபோதிலும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சத்தின் வழிகாட்டுதலான முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து நிலைமையினைக் கண்காணிக்க வேண்டும். எந்த ஒரு பகுதியிலாவது நோற்தொற்று விகிதம் அதிகரித்தால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி பிரந்திய அளவில் உடனடி மற்றும் தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நோய் தொற்றின் அபாயத்தை மதிப்பிட்ட பிறகு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மாநில அரசுகள் திறந்துவிட அறிவுறுத்தப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்று (செவ்வாய் கிழமை) நாடு முழுவதும் மொத்தம் 23,972 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 0.28 ஆக குறைந்துள்ளது. ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் இதுவரையில்., 181.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x