கொல்லம் கோயில் தீ விபத்து: விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதன் பின்னணி

கொல்லம் கோயில் தீ விபத்து: விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதன் பின்னணி
Updated on
1 min read

கொல்லம் புட்டிங்கல் தேவி கோயில் வெடிவிபத்தில் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொல்லம் புட்டிங்கல் தேவி கோயிலில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி கொண்ட வெடிவிபத்து, விதிமுறைகளை மீறியதால் ஏற்பட்டதே என்று வெடிபொருட்கள் கண்காணிப்பு அதிகாரி சுதர்சன் கமல் தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களை உபயோகித்தல், பாதுகாத்தல் மற்றும் உரிமங்கள் துறை கண்காணிப்பு அதிகாரி சுதர்சன் கமல் இது பற்றி கொல்லத்தில் இன்று செய்தியாளர்க்ளிடம் கூறும்போது, “வெடிபொருட்கள் விதிமுறைகள் அலட்சியமாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாணவேடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை செய்ய இங்கு வந்துள்ளோம்.

வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்தியுள்ளமையும் தெரிய வந்துள்ளது. அடிப்படை முன்னெச்சரிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றார்.

கொல்லம் மாவட்ட ஆட்சியர் ஷைனமோல் கூறும்போது, வாணவேடிக்கை நடத்த அனுமதிக்கவோ, மறுக்கவோ தனக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார்.

"நான் என் கடமையைச் செய்தேன், எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ சில விதிமுறைகள் உள்ளன. போலீஸ் மற்றும் தாசில்தார் ஆகியோரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளோம்.

போட்டி வாணவேடிக்கை என்ற ஒன்று இருப்பதாலும் அங்கு அதிக இடவசதி இல்லாததாலும் அனுமதி அளிக்க வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் யாரோ அனுமதி அளிக்க அது துயரத்தில் முடிந்துள்ளது, இது பற்றியே விசாரித்து வருகிறோம்” என்றார்.

கொல்லம் மாவட்ட கூடுதல் மேஜிஸ்ட்ரேட் ஷாநவாஸ் கூறும்போது, தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது, யார் மீறினார்கள் என்பது விசாரணையில் தெரியவரும் என்றார்.

இதற்கிடையே புட்டிங்கல் தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் செயலர் கிருஷ்ணன்குட்டி பிள்ளை என்பவர் பட்டாசு வெடிக்க அனுமதி கோரி செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

“இது வெறும் பட்டாசு வெடிப்பது மட்டுமல்ல, இதில் போட்டி நடைபெறுவதாக அறிகிறோம். எனவே அனுமதி மறுக்கிறோம்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதே உத்தரவில் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புட்டிங்கல் தேவி கோயில் வெடிவிபத்துக்கு மறுநாளான இன்று அட்டிங்கல் பகுதியில் ஸ்டோர்ஹவுஸ் ஒன்றில் சுமார் 100கிலோ வெடிபொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதாவது இதன் உரிமையாளர் உமேஷ் என்பவராவார். கோயில் வாணவேடிக்கை ஒப்பந்ததாரர் ஒருவரின் மகன் இவர் என்கிறது போலீஸ் விசாரணை.

இதனையடுத்து கொல்லம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in