ராணுவத்தில் சேர்வதற்காக இரவில் 10 கி.மீ. ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர்: திரைப்பட இயக்குநர் பகிர்ந்த வீடியோ வைரல்

பிரதீப் மெஹ்ரா
பிரதீப் மெஹ்ரா
Updated on
1 min read

புதுடெல்லி: தனியார் நிறுவன ஓட்டலில் பணியை முடித்த பின்னர் இரவு 12 மணிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர் குறித்த வீடியோவை திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள பரோலா கிராமத்தில் வசித்து வருகிறார் 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா. இவர் நொய்டாவிலுள்ள மெக்டொனால்ட் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு பணிக்கு வரும் மெஹ்ரா, இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். ஆனால் வீட்டுக்கு பஸ், ஆட்டோவில் செல்லாமல் இரவு 12 மணியளவில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடிச் செல்கிறார்.

இதுகுறித்து பிரதீப் மெஹ்ரா கூறும்போது, “எனக்கு ராணுவத்தில் பணி செய்ய ஆசை. ஆனால் காலையில் பணிக்கு வரவேண்டி இருப்பதால் ஓட்டப் பயிற்சி எடுக்க முடியவில்லை. இரவு நேரத்தில் பணி முடிந்த பின்னர் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி பயிற்சி எடுக்கிறேன்.

நான் பரோலாவிலுள்ள என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி உள்ளேன். நன்கு பயிற்சி எடுத்து ஒரு நாள் ராணுவத்தில் சேர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இவர் ஓடுவதைப் பார்த்த பிரபல திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி, அவரது ஓட்டப் பயிற்சியை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் பகிர்ந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

பிரதீப் மெஹ்ராவின் சொந்த ஊர் உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா நகரமாகும். வீட்டுக்குச் சென்ற பின்னர்வீட்டில் தானே சமைத்து சாப்பிடுகிறார். இவரது அண்ணன் இரவுப் பணிக்குச் செல்வதால் காலையில் வரும் அவருக்கும் சேர்த்து சமைத்து வைக்கிறார் பிரதீப் மெஹ்ரா.

இதுகுறித்து வினோத் காப்ரிகூறும்போது, “நொய்டா பகுதியில் உள்ள ஒரு சாலையில் இரவு 12மணிக்கு இளைஞர் ஒருவர் வேகமாக ஓடி வருவதைப் பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்தேன். தோளில் பையுடன் அவர் ஓடுவதைப் பார்த்ததும் அவருக்கு உதவி தேவைப்படுமோ என நினைத்து எனது காரை நிறுத்தினேன். லிப்ட் தருகிறேன் என்றும் கூறினேன். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். அவர் என்னுடைய அன்புக்குப் பாத்திரமாகிவிட்டார். அதனால் அவரது வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்தேன்” என்றார்.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறும்போது, “இதுபோன்றுதான் சாம்பியன்கள் உருவாகிறார்கள். விளையாட்டு மைதானமோ அல்லது வேறு களமோ தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்கள் வெற்றி பெறலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்த வினோத் காப்ரிக்கு நன்றி” என்றார்.

இதுபோன்று பலரும் பிரதீப் மெஹ்ராவின் வீடியோவைப் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in