

அசாம் முதல்கட்ட தேர்தலில் 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் இவர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்று ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
வேட்பு மனுவுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை அசாம் தேர்தல் கண் காணிப்பகம் (ஏ.இ.டபுள்யூ), ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) ஆகிய அமைப்பு கள் ஆராய்ந்தன. இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இதில் வெளியான பிற தகவல்கள் வருமாறு:
அசாமில் முதல்கட்ட தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தியுள்ள 65 வேட் பாளர்களில் 36 பேர் கோடீஸ்வரர் கள். பாஜக நிறுத்தியுள்ள 54 வேட்பாளர்களில் 23 பேர் கோடீஸ் வரர்கள். அசாம் கனபரிஷத் கட்சி சார்பில் 7 கோடீஸ்வரர்களும் தேசிய வாத காங்கிரஸ், போடோலாந்து மக்கள் முன்னணி (பிபீஎப்) ஆகியவை சார்பில் தலா 2 கோடீஸ் வரர்களும் களத்தில் உள்ளனர். இதுதவிர சுயேச்சை வேட்பாளர்கள் 280 பேரில் 26 பேர் கோடீஸ்வரர்கள்.
இதற்கு நேர்மாறாக, மொத்த வேட்பாளர்களில் (539) 2 பேர் சொத்து எதுவும் இல்லை (0) என்று குறிப்பிட்டுள்ளனர். இடதுசாரி கட்சி வேட்பாளர் ஒருவரும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.