மே 1-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த எம்.பி.க்கள் எதிர்ப்பு

மே 1-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த எம்.பி.க்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

வரும் மே 1-ம் தேதி மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு மக்களவையில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். குறுகிய கால அவகாசத்துக்குள் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 2018 வரை மாநில அரசுகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங் களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி மே 1-ம் தேதி மற்றும் ஜூலை 24-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான பிரச் சினையை நேற்று மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பிய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் “ஒரே கட்ட தேர்வாக வரும் ஜூலை 24-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு சமமான கால அவகாசம் கிடைக்கும்” என்றார். இதனை, காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதாவ் ஆதரித்தார். மேலும், “மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு 2018 வரை அவகாசம் அளிப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

அம்மாநில அரசு ஏற்கெனவே அட்டவணையை வெளியிட்டு விட்டோம் என்று வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை. இதனால் 80 சதவீத மகாராஷ்டிர மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

ஜகதாம்பிகா பேசும்போது, “தேசிய தகுதி நுழைவுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தினால், 2-வது கட்டமாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அது சாதகமாக முடியும். முதல்கட்டத்தில் தேர்வு எழுதுபவர்கள் போதிய கால அவகாசத்துக்குள் தயாராக முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாவர்” என்றார்.

சிவசேனா எம்.பி. அர்விந்த் சவந்த் பேசும்போது, “முன்பு தங்கள் தாய்மொழியிலேயே மாணவர்கள் தேர்வெழுதினர். தற்போது இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும்.

அதிக வாய்ப்புகளை அளிக்க அவகாசம் இல்லை என சிபிஎஸ்இ தெரிவித்து விட்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in