Published : 21 Mar 2022 07:37 AM
Last Updated : 21 Mar 2022 07:37 AM

தொகுதியில் 18 மணி நேரம் வேலை செய்ய பஞ்சாப் மாநில எம்எல்ஏ.க்களுக்கு இலக்கு: முதல்வர் பகவந்த் மான் நடவடிக்கை

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களுடனான கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கேஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கட்சித் தலைவர் ராகவ் சதா கலந்துரையாடினர். படம்: பிடிஐ

சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் பகவந்த் மான் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பஞ்சாப் அமைச்சரவையில் 18 அமைச்சர்கள் இடம்பெறலாம். எனினும், தனது அமைச்சரவையை சிறியதாக வைத்துக் கொள்ள பகவந்த் மான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மொகாலியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் மற்றும் டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது பகவந்த் மான், எம்எல்ஏ.க்களிடம் பேசியதாவது:

பஞ்சாப் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதன்படி அவர்கள் செயல்படவில்லை என்றாலும், மக்கள் பணிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை என்றாலும், அவரை பதவியில் இருந்து நீக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கலாம்.

மேலும், கட்சி எம்எல்ஏ.க்கள்தங்கள் தொகுதிகளில் உடனடியாக அலுவலகம் தொடங்க வேண்டும். தினமும் அலுவலகத்தை தொடங்கி 18 மணி நேரம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பகவந்த் மான் கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், முந்தைய அரசில்அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்து, அதை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். பாழான பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஊழலுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி எண் அறிவித்திருக்கிறார். மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியிருக்கிறார். அவற்றில் 10 ஆயிரம் போலீஸார் பணியிடங்களும் அடங்கும்.

எம்எல்ஏ.க்கள் சண்டிகரில் உட்கார்ந்து கொண்டிருக்க கூடாது. அவர்கள் தங்கள் தொகுதிகளில் பணியாற்ற வேண்டும். மக்களுடன் மக்களாக எம்எல்ஏ.க்கள் சுற்ற வேண்டும். கிராமம் கிராமமாக அவர்கள் சென்று பணியாற்ற வேண்டும்.

பஞ்சாப் மக்கள் 92 வைரங் களை (எம்எல்ஏ.க்கள்) தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பகவந்த் மான் தலைமையில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். நான் டெல்லியில் இருந்து கண்காணிப்பேன். பகவந்த் மானுக்கு நான் சகோதரன் போல் இருப்பேன்.

இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x