பிரதமரின் ஊரக வீடு கட்டும் திட்டத்தில் 1.75 கோடி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

பிரதமரின் ஊரக வீடு கட்டும் திட்டத்தில் 1.75 கோடி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமரின் ஊரக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.75 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பிரதமரின் ஊரக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதிலிருந்து 12 மாதங்களுக்குள் வீட்டைக் கட்டி பயனாளியிடம் ஒப்படைக்க வேண்டும். வீடு கட்டுவதற்கான நிதியுதவி பயனாளிகளுக்கு 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் வீடுகள்கட்டி முடிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, கரோனா ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பயனாளி திடீரென உயிரிழத்தல் மற்றும் நிலமற்ற பயனாளிக்கு மாநில அரசு நிலம் ஒதுக்குவதில் ஏற்படும் தாமதம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் மார்ச் 2021-க்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் 2024 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in