ஊழலுக்கு எதிரான புகார்களை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

ஊழலுக்கு எதிரான புகார்களை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Published on

அமிர்தசரஸ்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பகவந்த் மான் நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில், ஊழலுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்படும் என்றும் அது தனது வாட்ஸ் அப் எண் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களில் 99 சதவீதம் பேர் நேர்மையானவர்கள். மீதியுள்ள 1 சதவீதம் பேரால் நாட்டின் அமைப்பு முறை சிதைகிறது. பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23-ம் தேதியன்று ஊழலுக்கு எதிராக புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்படும். அது எனது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை எனக்கு அனுப்புங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனி ஊழலுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லியில் நேற்று பேட்டியளித்த டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், ‘‘ஊழலுக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பகவந்த் மானுக்கு வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்தார்.

- பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in