

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்து அமைப்பான ராஷ்டீரிய சேனையைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து புனேவின் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்" என்றார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, ராஷ்ட்ரீய சேனை என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதே அமைப்பை சேர்ந்ததாக கருதப்படும் மேலும் 4 பேரை போலீசார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
ஃபேஸ்புக் பகிர்வால் கலவரம்
மகாராஷ்டிரத்தில் சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் மராட்டிய மன்னர் சிவாஜி மற்றும் மறைந்த சிவசேனை தலைவர் பால் தாக்கரேவை இழிவுப்படுத்தும் விதமான சில புகைப்படங்கள் பகிரப்பட்டதை அடுத்து, புனே உள்ளிட்ட சில இடங்களில் மோதல்கள் நடந்தன. இந்து அமைப்பினர் கலவரங்களில் ஈடுபட்டதில் சுமார் 200 பேருந்துகள் சூறையாடப்பட்டுள்ளது.
பூனே உள்ளிட்ட நகரங்களில் ஃபேஸ்புக் பகிர்வால் தொடர்ந்த கலவரங்களை அடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த சில தினங்களாக பதற்றம் சற்று குறைந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டது. அந்த வேளையில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.