Published : 17 Mar 2022 07:32 AM
Last Updated : 17 Mar 2022 07:32 AM

ஆந்திராவில் வரி செலுத்தாத கடைகள் முன் குப்பையை குவித்த மாநகராட்சி ஊழியர்கள்

கர்னூல்: ஆந்திர மாநிலம், கர்னூலில் குப்பை வரி செலுத்தாதவர்களின் கடைகள் முன், மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டிச் சென்றனர். இதற்கு கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் குப்பையை அள்ளி செல்ல மாத கட்டணமாக ரூ. 100 முதல் 500 வரை வசூல் செய்யப்படுகிறது. இது தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கர்னூலில் உள்ள கொண்டாரெட்டி புருஜு அருகே உள்ள பஜார் தெருவில் வார்டு செயலாளர்கள், மற்றும் ஊழியர்கள், கடை, கடையாக சென்று, வரி வசூலித்து வந்தனர்.

அப்போது சில கடைக்காரர்கள், சொத்து வரி, குழாய் வரி மற்றும் டிரேட் லைசென்ஸ் கட்டணம் போன்றவை செலுத்தும்போது எதற்காக குப்பை வரி செலுத்த வேண்டுமென கேள்வி எழுப்பினர். இதற்கு கோபம் அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் வேறு எங்கெங்கோ சேகரித்த குப்பைகளை கொண்டு வந்து பஜார் தெருவில் கேள்வி கேட்டவர்களின் கடைகள் முன் கொட்டி விட்டு சென்று விட்டனர். இது குறித்து வணிகர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x