புட்டிங்கல் கோயில் அருகே வெடிபொருட்களுடன் 3 மர்ம கார்கள்: போலீஸார் கைப்பற்றினர்

புட்டிங்கல் கோயில் அருகே வெடிபொருட்களுடன் 3 மர்ம கார்கள்: போலீஸார் கைப்பற்றினர்
Updated on
1 min read

கொடூரமான தீவிபத்து ஏற்பட்ட கொல்லம், பரவூர் புட்டிங்கல் கோயிலுக்கு 500மீ தொலைவில் ஷர்கரா தேவி ஆலயம் அருகே பயங்கர வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஞாயிறன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்ட புட்டிங்கல் தேவி கோயிலுக்கு 500மீ தொலைவில் உள்ள ஷர்கரா தேவி கோயிலுக்கு அருகே பயங்கர வெடிபொருட்களுடன் 3 கார்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்தது. இது ஞாயிறு இரவு போலீஸார் கவனத்துக்கு வந்தது. அதாவது அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் போலீஸாரை அழைத்து இந்த கார்கள் சந்தேகத்தை அளிக்கிறது என்று புகார் அளித்ததையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியை வளைத்த போலீஸார் கார்களை சோதனையிட்டனர். சிறு தீப்பொறி பட்டாலும் வெடித்துச் சிதறக்கூடிய வெடிபொருட்கள் இருந்ததாகவும், சில வெடிபொருட்கள் சக்தி வாய்ந்தவையாக இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் வசதி மாநில பொலீஸாரிடம் இல்லாததால் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு நிபுணர்கள் வசம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் பரவூர் கோயில் வெடிவிபத்து விசாரணைக் குழுவின் ஒரு அங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்லம் நகர போலீஸ் ஆணையர் பி.பிரகாஷ் கூறும்போது, “3 கார்களில் 2-ல் கொல்லம் மாவட்ட ரெஜிஸ்ட்ரேஷன் எண்கள் இருந்தது. இன்னொரு காரில் திருவனந்தபுரம் பதிவு எண் இருந்தது. இந்தக் கார்களின் உரிமையாளர்கள் யார் யார் என்ற விவரம் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

மிகப்பெரிய வெடிவிபத்து துயரத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான அதே நாளிலேயே அந்தக் கோயிலுக்கு அருகே வெடிபொருட்களுடன் 3 கார்கள் மர்மமான முறையில் கைப்பற்றப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in