Published : 19 Apr 2016 07:33 AM
Last Updated : 19 Apr 2016 07:33 AM

கோஹினூர் வைரம் திருடப்படவில்லை; இங்கிலாந்துக்கு பரிசாக வழங்கப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

‘‘இந்தியாவின் கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. அதை இங்கிலாந்து ராணிக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டி யெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இந்த வைரம் மன்னராட்சி காலத்தில் பலருடைய கைகளுக்கு மாறியது. பின்னர் இங்கிலாந்து ராணி விக்டோரியாவிடம் அந்த வைரம் சென்றடைந்தது.

இப்போது அந்த வைரம் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட் டுள்ளது. அந்த கிரீடத்தை ஆண் டுக்கு ஒருமுறை பொது மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். இங்கி லாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் ராணியாக முடிசூட்டிக் கொண்டால், கோஹி னூர் வைரத்துடன் அந்த கிரீடம் அவருக்கு சொந்தமாகிவிடும்.

இந்நிலையில், இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இங்கிலாந் திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், கோஹினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியது. மேலும், ‘‘கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதை திரும்ப தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை’’ என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கூறியிருந்தார்.

அதன்பின்னர், அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, அந்த வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அந்த மனுவை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் விசாரித்து, ‘‘கோஹினூர் வைரத்தை இங்கிலாந் திடம் இருந்து திரும்ப பெறும் எண்ணம் உள்ளதா? இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறதா? ஏனெனில், வருங் காலத்தில் அந்த வைரத்துக்கு சொந்தம் கொண்டாடினால், மத்திய அரசுக்கு சிக்கல்கள் ஏற்படும். எனவே, மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறியதாவது:

கோஹினூர் வைரம் இந்தியா வில் இருந்து திருடப்படவில்லை. இந்தியாவில் இருந்து வலுக்கட் டாயமாக கொள்ளை அடிக்கப்படவும் இல்லை. கடந்த 1850-ம் ஆண்டு இங்கிலாந்து ராணிக்கு இந்தியா பரிசாக வழங்கி விட்டது. அதை திரும்ப கொடுங்கள் என்று கேட்க முடியாது. இதுதான் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு ரஞ்சித் குமார் கூறினார்.

இதையடுத்து 6 வாரங்களுக் குள் விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி தாக்குர் உத்தரவிட்டார்.

கடந்த 1850-ம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங், கோஹினூர் வைரத்தை கிழக்கிந்திய கம்பெ னிக்கு அன்பளிப்பாக வழங்கிய தாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x