

டெல்லியில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்து கடந்த இரு வருடங்களாக குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் இந்திய தொல்லியல் துறையின் பதிவேடுகளில் இருந்து வெளியாகி உள்ளது.
டெல்லிக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் அதன் வரலாற்று சின்னங்களை பார்வையிடுவோர் அதிகம் உண்டு. இங்கு ஜந்தர் மந்தர், கான்-எ-கானா, பழைய கோட்டை, சுல்தான்கரி கல்லறை, துக்ளக்காபாத், கேட்லா பெரோஸ்ஷா, குதுப்மினார், செங்கோட்டை, சப்தர்ஜங் மற்றும் ஹுமாயூன் சமாதிகள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றன. இந்த துறையினர் பதிவு செய்யும் புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 69,661 என்றிருந்த வெளிநாட்டவர் வருகை, 2014-15-ல் 68,069 எனக் குறைந்துள்ளது. இந்த இரு ஆண்டுகளுக்கு முன் 2012-13-ல் மிக அதிகமாக 86,683 எனப் பதிவாகி இருந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் இந்திய தொல்லியல் துறையின் டெல்லி பகுதி கண்காணிப்பாளரான தல்ஜித்சிங் கூறுகையில், ‘வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை போதுமான அளவிற்கு உள்ளன.’ எனத் தெரிவித்தார்.
டெல்லியின் அனைத்து வரலாற்று சின்னங்களிலும் செங்கோட்டை மற்றும் குதுப்மினார் ஆகிய இரண்டும் வெளிநாட்டவர் அதிகமாக விரும்பி பார்க்கும் இடங்களாக உள்ளன. எனினும், இந்த இரண்டிலும் கூட கடந்த இரு ஆண்டுகளாக வெளிநாட்டவர் வரத்து குறைந்து வருகிறது. வெளிநாட்டவர் வருகை குறித்து மீது ஆய்வு செய்ய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஒரு தனியார் அமைப்பு அமர்த்தப்பட்டுள்ளது. இது தனது இடைக்கால அறிக்கையில், ஜனவரி 2015-ல் 36.78 என இருந்தது எனவும், 2016 ஜனவரியில் அது வெறும் மூன்று சதவிகிதம் மட்டும் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வருகை குறைவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருப்பது இந்திய சுற்றுலாத்துறையினருக்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.