

காஷ்மீர்: 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கான மத்திய அரசின் ஆக்ரோஷமான பிரச்சாரம் என்பது பழைய காயத்திற்கு மருந்திடாமல், சமூகப் பிரிவினையைத் தூண்டும் வகையில் உள்ளது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் பலவற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மக்கள் பார்ப்பதற்குத் தூண்டும் வகையில் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். இதேபோல், பாஜக மாநில முதல்வர்களும் இப்படத்துக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் மூலம் பாஜக பிரிவினையைத் தூண்டுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை மத்திய அரசு ஆக்ரோஷமாக ஊக்குவிப்பது காஷ்மீர் பண்டிட்களின் வலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் அவர்களின் தவறான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பழைய காயங்களுக்கு மருந்திடாமல் இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் வேண்டுமென்றே பிரிக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.