

புதுடெல்லி: நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (மார்ச் 16) காலை தொடங்கியது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிவிட்ட ட்வீட்டில், கரோனாவுக்கு எதிராக குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இன்றொரு முக்கியமான நாள். இன்றுமுதல் 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அனைவரும் தடுப்பூசி செலுத்திப் பயனடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர், "நாடு முழுவதும் 12 - 14 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (மார்ச் 16) தொடங்கப்படும். மேலும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கும்.
நாட்டில் 12 - 14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, அறிவியல் துறை நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயலாஜிக்கல் இவான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நாடும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மேற்குறிப்பிட்ட வயதுள்ள குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை நாடு முழுவதும் இத்திட்டம் தொடங்கியுள்ளது.
வயதை எப்படி கணக்கிடுவது? - 12 வயது முதல் 14 வயது வரை என்றால் 12 முடிந்திருக்க வேண்டுமா, 12 ஆரம்பத்திலேயேவா என்றெல்லாம் பொதுமக்களுக்கு சந்தேகம் எழும் அல்லவா? அதனால், மத்திய அரசு இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது 12 தொடங்கி 13 வயது வரை 13 தொடங்கி 14 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசிக்குத் தகுதியானவர்கள். 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி கடந்து வந்த பாதை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நாட்டில் முதன்முதலாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட தொடங்கியது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின் , கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.
2021, அக்டோபர் 21 ஆம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை எட்டப்பட்டது. 2022, ஜனவரி 7 ஆம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வயதுப் பிரிவில் மொத்த 7.4 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் இரு தவணை தடுப்பூசியையும் முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 180.40 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.