

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் டெல்லியில் அறிவுசார் மையம் (Knowledge centre) அமைக்க அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு இடம் தேர்வு செய்துள்ளது. இதில் வைப்பதற்காக கலாம் பயன்படுத்திய பொருட்களை பெற்றுச் செல்ல டெல்லி சுற்றுலாத் துறை அமைச்சர் விரைவில் ராமேஸ்வரம் வரவுள்ளார்.
கலாம் மறைந்தபோது, அவரது நினைவாக டெல்லியில் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அம்மாநில அரசு அதிகாரிகள் ராமேஸ்வரம் வந்து, கலாம் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்துச் சென்றனர். இதன் பிறகு அறிவுசார் மையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் டெல்லி அரசு இறங்கியது. இதில் டெல்லி சரோஜினி நகர் பகுதியில் உள்ள ஐ.என்.ஏ. மார்க்கெட்டில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இடம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது. கலாமின் நினைவு தினமான ஜூலை 27-ம் தேதி இங்கு அறிவுசார் மையம் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் டெல்லி மாநில சுற்றுலாத் துறை ஈடுபட்டுள்ளது. இத்துறை அமைச்சரான கபில் மிஸ்ரா தனது அதிகாரிகள் குழுவுடன் வரும் ஏப்ரல் 5-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். இங்கு கலாமின் குடும்பத்தினரை சந்தித்து, கலாம் பயன்படுத்திய பொருட்களை பெற்றுச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதில் கலாம் பயன்படுத்திய ஆடைகள், இசைக்கருவிகள், பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து நூல்கள், விருதுகள், பரிசுப் பொருட்கள் என அனைத்தும் அடங்கும்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநில அதிகாரிகள் கூறும்போது, “கலாமின் பொருட் களை வாங்கி வந்து டெல்லி சட்டப்பேரவை அரங்கத்தில் பாதுகாத்து வைக்க உள்ளோம். இப்பொருட்களை வைக்க அறிவுசார் மையத்தில் தேவைக்கு ஏற்றவாறு இடம் திட்டமிடப்படும். பிறகு அனைத்து பொருட்களும் அங்கு மாற்றப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்” என்றனர்.
கலாம் மறைந்தபோது, டெல்லியில் அவர் வசித்து வந்த எண் 10, ராஜாஜி மார்க் அரசு பங்களாவை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக கலாமின் குடும்பத்தினர் எழுப்பிய இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாறாக அந்த வீட்டை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சரான மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கியது. அந்த வீட்டில் இருந்த கலாமின் பொருட்கள் ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.