Published : 15 Mar 2022 08:40 PM
Last Updated : 15 Mar 2022 08:40 PM

தேர்தல் தோல்வி எதிரொலி: 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தந்த மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் பதவி விலகவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. 7 கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் அந்தக் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியைச் சந்தித்திருந்த காங்கிரஸ் கட்சி, உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட், மணிப்பூர் கோவாவில் பாஜகவால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ’தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலக வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜோவாலா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பற்றி விவாதிக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமையில் அக்கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியை வலுப்படுத்தவும், அரசியல் சூழலுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய தலைமையைக் கட்சி கேட்டுக்கொண்டது. அதேபோல, கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கும் ஆகஸ்ட் - செப்டம்பர் சோனியா காந்தியே கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களில் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அஜய் குமார் லல்லு , உத்தராகண்ட் கணேஷ் கோடியால், பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்து, கோவாவில் கிரிஷ் சோடங்கர், மற்றும் மணிப்பூரில் நமீரக்பம் லோகேன் சிங் ஆகியோர் கட்சியின் மாநிலத் தலைவர்களாக காங்கிரஸிற்கான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.

இவர்களை கட்சிப் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி உத்தரவிட்டுள்ள நிலையில், உத்தராகண்ட் மாநிலத் தலைவர் கணேஷ் கோடியால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று இன்று தான் பதவி விலகுவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x