

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே 4-ம் நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.
வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடும்போது, “1991-96 காலக் கட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் புதிய கட்டிடங்கள் கட்டியது, சொத்துக் கள் வாங்கியது, வங்கியில் கடன் பெற்றது என ரூ.2.5 கோடி செலவு செய்துள்ளனர். மூவருக்கும் போதிய வருமானம் இல்லாத நிலையில், வருமானத்தை மீறி ரூ.2.5 கோடி செலவு செய்துள்ளனர் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசு சான்று ஆவணம் 4-ம் தொகுதியில் குறிப்பிட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி‘குன்ஹா, மூவரும் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்துள்ளனர். இந்த பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் செலவினம் தொடர் பான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யின் குற்றச்சாட்டு தவறானது. மூவரும் பங்குதாரர்களாக இருந்த தனியார் நிறுவனங்களின் பேரில் வங்கியில் கடனாக பெற்று, சொத்துக்கள் வாங்கியதை செலவினமாக கணக்கிட்டுள்ளனர்.
இதேபோல சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் டில் உள்ள பங்களாவை புதுப் பித்தது, புதிய கட்டிடம் கட்டியது ஆகியவற்றுக்கு ஆன செலவை மிகைப்படுத்திக் காட்டியுள்ளனர். குறிப்பாக சலவை கற்கள், அலங் கார கண்ணாடி ஆகியவற்றின் மதிப்பை பன்மடங்கு அதிகமாக கணக்கிட்டுள்ளனர். மேலும் வங்கியில் பெற்ற கடன், அதற்கு செலுத்தப்பட்ட வட்டி ஆகிய வற்றை எல்லாம் சேர்த்து செலவின மாக காட்டியுள்ளனர்.
மேலும் கொடநாடு எஸ்டேட், ஜெ ஃபார்ம் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட செலவை 2 முறை பதிவு செய்துள்ள னர். இதன் மூலமாகவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் செலவினம் ரூ.2.5 கோடி என கூறி யுள்ளனர்.
1991-96 காலகட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகி யோர் தாக்கல் செய்துள்ள வருமான வரித்துறை கணக்கின்படி மூவரின் செலவினம் ரூ.75 லட்சம் மட்டுமே.
இந்தத் தொகைக்கு தேவை யான அனைத்து ஆவணங்களும், ஆதாரங்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் வருமான வரித்துறை தீர்ப்பாயம் இந்த செலவு தொகையை உறுதி செய்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள தவறுகளை உணர்ந் துக்கொண்டு, வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் அடுத்தக்கட்ட விசார ணையை வரும் மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். சசிகலா தரப்பின் இறுதிவாதம் நேற்றும் நிறைவடையவில்லை. எனவே அன்றைய தினமும் சசிகலா தரப்பின் இறுதிவாதம் தொடரும். இதனால் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி தள்ளிப்போகும் என தெரிகிறது.