

டெல்லி ஜும்மா மசூதி ஷாயி இமாம் இமாம் அகமது புகாரியை, சோனியா காந்தி சந்தித்து இருக்கக் கூடாது’ என்ற தனது கருத்தினால் சர்ச்சை கிளம்பியதால் அதை, பிஹார் காங்கிரஸ் எம்பி மௌலானா அஷ்ராருல் ஹக் மறுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அகமது புகாரியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். இந்நிலையில், அஷ்ராருல் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சோனியா-புகாரி சந்திப்பால் மக்களுக்கு சென்ற தவறான செய்தியே தோல்விக்கு காரணம் எனவும் இந்த சந்திப்பை தவிர்த்திருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், ‘‘ஷாயி இமாமை நான் ஒரு மதவாதியாகத்தான் கருதுகிறேன். ஏனெனில், அவர் வாஜ்பாய் ஆட்சியில் அவரை சந்தித்ததுடன் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக ’பத்வா’ அளித்திருந்தார்’’ என தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஷீத் ஆல்வி கூறுகையில், ‘‘அஷ்ராருல் கூறியது போன்ற கருத்து சொல்லும் நேரம் அல்ல இது. அனைவரும் இணைந்து கட்சியை முன்னேற்றிச் செல்வது எப்படி என யோசிக்கும் தருணம் இது’’ என கூறியுள்ளார்.
இதுபற்றி, அஷ்ராருல், 'தி இந்து'விடம் கூறுகையில், ‘‘பத்திரிகையில் நான் சொல்லாததையும் சேர்த்து தவறாக பிரசுரித்துள்ளார்கள். அதில் குறிப்பிட்டதை போல் நான் கூற நினைத்திருந்தால் அதை, கட்சித் தலைவர்களிடம் நேரடியாகக் கூறியிருப்பேன். அவர்களுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லை’’ என்றார்.